/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பு, மதகு சேதம், கழிவு நீர் கலப்பு விரக்தியில் மேட்டமலை கண்மாய் விவசாயிகள்
/
ஆக்கிரமிப்பு, மதகு சேதம், கழிவு நீர் கலப்பு விரக்தியில் மேட்டமலை கண்மாய் விவசாயிகள்
ஆக்கிரமிப்பு, மதகு சேதம், கழிவு நீர் கலப்பு விரக்தியில் மேட்டமலை கண்மாய் விவசாயிகள்
ஆக்கிரமிப்பு, மதகு சேதம், கழிவு நீர் கலப்பு விரக்தியில் மேட்டமலை கண்மாய் விவசாயிகள்
ADDED : ஜூலை 11, 2024 04:48 AM

சாத்துார்: சாத்துார் மேட்ட மலை கண்மாய் தொடர் பராமரிப்பு இல்லாததால் மதகு சேதம் அடைந்தும் கழிவு நீர் கலந்தும் நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் சுருங்கியும் தண்ணீரை தேக்கமுடியாமல் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
மேட்டமலை கண்மாய் மூலம் நெல் கரும்பு பருத்தி தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டன. இந்த கண்மாய்க்கு வெங்கான் நாயக்கன்பட்டி, இ. குமாரலிங்கபுரம், சின்னக்காமன்பட்டி கண்மாயிலிருந்து நீர்வரத்து ஓடைகள் உள்ளன. இந்த நீர் வரத்து ஓடைகளை ஆக்கிரமித்து பலர் தங்கள் நிலங்களுக்கு பாதை அமைத்துள்ளனர்.
இதனால் நீர் வரத்து ஓடைகள் மண் மேவி முள் செடி முளைத்து பரிதாப நிலையில் காணப்படுகிறது. பலத்த மழை பெய்தாலும் ஓடை வழியாக மிகக் குறைந்த அளவு தண்ணீரை கண்மாயை வந்து அடைகிறது.
10 ஆண்டுகளுக்கு மேலாக நீர் வரத்து ஓடைகள் பராமரிக்கப்படவில்லை. மேலும் ஓடைகள் அருகில் புதியதாக உருவான குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் சாக்கடையும் கலந்து வருகிறது.
பலர் ஓடையை குப்பைத் தொட்டி போல குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் நீர்வரத்து ஓடைகள் குப்பை மேடாக காணப்படுகிறது.
கண்மாய்க்குள் மேட்டமலை ஊராட்சியில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் முழுவதும் கண்மாயில் கலந்து வருகிறது.
கண்மாயில் உள்ள இரண்டு மதகுகளும் பழுதான நிலையில் உள்ளன. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தாலும் நீர்ப்பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக கண்மாய்க்கு போதுமான அளவு தண்ணீர் வராததால் இந்த பகுதியில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓரிரு விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மூலம் விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.
காட்டுப் பன்றியால் தொல்லை
2 மதகுகளும் பழுதடைந்து விட்டது. சீரமைக்க வேண்டும். தண்ணீர் திறந்து விட்டாலும் பாசன கால்வாய் இல்லை புதியதாக பாசன கால்வாய் கட்ட வேண்டும். நெல் ,பருத்தி ,கம்பு ,கரும்பு என பல்வேறு பயிர்களை விளைவித்து வந்தோம் . தற்போது மானா வாரியாக ஒரு சிலர் மட்டும் மக்காச்சோளம் விதைத்து வருகிறார்கள். இவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.கண்மாயை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காளிராஜ், விவசாயி.
குப்பையால் கேடு
இ. குமாரலிங்கபுரம், வெங்கான் நாயக்கன்பட்டியில் இருந்து வரும் நீர் வரத்து ஓடைகள் குப்பை மேடாக உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளதால் மழை பெய்தாலும் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை. 10 ஆண்டுகளாக கண்மாய் நிரம்பாததால் விவசாயம் நடைபெறவில்லை. நீர்வரத்து ஓடைகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
- மாரியப்பன், விவசாயி.
கரைகள் சேதம்
மேட்டமலை கண்மாய் கரை முழுவதும் முன்பு மண்ணரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக கற்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கற்களை காணவில்லை. கரைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன இதை அகற்ற வேண்டும். கண்மாய்க்குள் வளர்ந்துள்ள முள்செடிகளை அகற்றுவதோடு கரையை பலப்படுத்த அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
- செல்லையா, விவசாயி.