/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு மூலப்பொருள் ஆலையில் விபத்து பெண் உட்பட ஐந்து பேர் காயம்
/
பட்டாசு மூலப்பொருள் ஆலையில் விபத்து பெண் உட்பட ஐந்து பேர் காயம்
பட்டாசு மூலப்பொருள் ஆலையில் விபத்து பெண் உட்பட ஐந்து பேர் காயம்
பட்டாசு மூலப்பொருள் ஆலையில் விபத்து பெண் உட்பட ஐந்து பேர் காயம்
ADDED : மே 07, 2024 10:19 PM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தயாரிப்புக்கான அலுமினிய பேப்பர் சீவு துாள் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிவகாசி திருமேனி நகரைச் சேர்ந்தவர் சின்ன கருப்பு, 44. இவருக்கு செங்கமலப்பட்டி அருகே காட்டுப்பகுதியில் இடம் உள்ளது. அங்கு தகர செட் அமைத்து அலுமினியம் பேப்பர் சீவு துாள் தயாரித்து வருகிறார்.
இங்கு அலுமினிய பேப்பர்களை எரித்து சட்டி, சக்கரம் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஞாயிறன்று பெய்த மழையில் தகர செட் சேதம் அடைந்தது. அதை சரி செய்வதற்கு வெல்டிங் பணி நடந்தது. அப்போது தீப்பொறி பறந்து விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது.
அங்கு வேலை பார்க்கும் சின்ன கருப்பு, மகேந்திரன், 26, சதீஷ்குமார், 27, அன்புராஜ், 27, வீரலட்சுமி, 28, ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து ஏற்பட்டவுடன் 5 கி.மீ., துாரத்துக்கு பயங்கர சத்தம் கேட்டது. மேலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. அதிலிருந்து எழும்பிய புகை 2 கி.மீ., துாரத்துக்குப் பரவியது. பொதுவாக அலுமினியம் சீவு துாள் எரியும் தன்மை மட்டுமே உடையது. ஆனால் அதிக சத்ததுடன் வெடித்ததால் இங்கு அனுமதி இன்றி பட்டாசு இருப்பு வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது தயாரித்திருக்கலாம் என போலீசார் கூறினர்.
தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

