/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விநாயகர் சிலை தயாரிக்கும் முறை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
/
விநாயகர் சிலை தயாரிக்கும் முறை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
விநாயகர் சிலை தயாரிக்கும் முறை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
விநாயகர் சிலை தயாரிக்கும் முறை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
ADDED : ஆக 25, 2024 04:16 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு வழிமுறைகள், கரைக்கும் இடங்களை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப். 7ல் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான விநாயகர் சிலைகள் தயாரிப்பில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், அலங்காரம், பூஜை பொருட்களாக பிளாஸ்டிக், தெர்மாகோல், ரசாயனப்பொருட்கள், சாயங்களை பயன்படுத்தக்கூடாது.
மேல்பூச்சு, அலங்காரத்திற்கு மக்கும் தன்மையற்ற ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை உபயோகிக்க வேண்டாம்.
பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், உறிஞ்சு குழாய்களை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
அனுமதி இல்லா இடங்களில் சிலைகளை கரைத்தல், குப்பை, கழிவுகளை கொட்டுதல், பிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்துதல் கூடாது.
பயன்படுத்த வேண்டியவை
விநாயகர் சிலைகளை இயற்கையாக மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற, இயற்கை சாயங்களை வைத்து தயாரிக்க வேண்டும்.
பூக்கள், இலைகள், துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தலாம். துவைத்து மீண்டும் பயன்படுத்தும் துணிகள் அலங்காரத்திற்கும், பிரசாதம் கொடுக்க மக்கும் தட்டுகள், கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தலாம்.
எல்.இ.டி., பல்புகளை உபயோகிக்க வேண்டும்.
சிலைகளை கரைக்கும் இடங்கள்
விருதுநகரை சுற்றிய பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் கல் கிடங்கு, ஆவுடையாபுரத்தில் உள்ள உபயோகப்படாத கிணறு, சிவகாசி நகர் பகுதியில் தெய்வானை நகரில் உள்ள உபயோகப்படாத கிணறு, எம்.புதுப்பட்டி, மாரனேரி பகுதிகளுக்கு மாரனேரி கண்மாய், ஸ்ரீவில்லிப்புத்துார் மடவார் வளாகம், பந்தல்குடி பெரிய கண்மாய், ராஜபாளையத்தில் வடுகவூரணியில் கரைக்க வேண்டும்.
அம்மாபட்டி, ஏழாயிரம் பண்ணை, ஆலங்குளத்திற்கு அங்குள்ள உபயோகப்படாத கிணறு, தெப்பம், ஆலங்குளம் குவாரி பகுதி, கிருஷ்ணன் கோவிலில் ராமச்சந்திராபுரம் கண்மாய், குன்னுார் கண்மாய்.
வத்திராயிருப்பு, கூமாபட்டி சிலைகளை மகாராஜபுரம், கூமாபட்டி பெரியகுளம் கண்மாய், அருப்புக்கோட்டை நகருக்கு பந்தல்குடி ரோடு பெரிய கண்மாய், ஸ்ரீவில்லிப்புத்துார் தாலுகாவில் இருந்து வரும் சிலைகளை திருவண்ணாமலை கோனகிரி குளத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறையின் படி கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கலெக்டர், எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம், என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.