/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏழாயிரம்பண்ணையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
/
ஏழாயிரம்பண்ணையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு
ADDED : மே 26, 2024 03:32 AM
சாத்துார்: ஏழாயிரம்பண்ணையில் புற்றீசல் போல் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புக்களால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.
சாத்துாரில் இருந்து ஏழாயிரம்பண்ணை வழியாக சங்கரன் கோயிலுக்கு செல்லும் ரோட்டில் இருபுறமும் ஓட்டல்கள், டீக்கடைகள், பாஸ்புட் கடைகள் அதிகளவில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளது. ஏழாயிரம்பண்ணையில் தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் காலை மாலை நேரங்களில் வேலைக்குச் செல்பவர்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என ஏழாயிரம்பண்ணை மெயின் ரோடு மிகவும் போக்குவரத்து நெருக்கடி நிறைந்து காணப்படுகிறது.
ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளிவரும் வாகனங்களும் சங்கரன்கோவிலில் இருந்து வரும் வாகனங்களும் பராசக்தி மாரியம்மன் கோயில் முன்பு உள்ள சந்திப்பு வழியாக திரும்பி சாத்தூர் வர வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது மேலும் ரோடு வரை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளது. ஒரு வாகனம் வந்தால் மற்றொரு வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. காலை மாலை நேரங்களில் அதிக அளவு போக்குவரத்து இருப்பதால் வாகனங்கள் தெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. வழிகேட்டு வாகனங்கள் ஒலி எழுப்புவதால் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த செல்லப்பாண்டியன் கூறியதாவது: தற்போது இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. லோடு ஆட்டோ வாகனங்களும் பள்ளி வாகனங்களும் ஏழாயிரம் பண்ணையை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆகிறது. 121 அடி ரோடு தற்போது 30 அடி ரோடாக மாறிவிட்டது. ஆக்கிரமிப்பு கடைகளால் ரோடு மிகவும் சுருங்கி விட்டது. பள்ளி திறக்கும் நேரத்தில் மாணவர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.