ADDED : ஜூன் 11, 2024 07:20 AM
விருதுநகர் : விருதுநகரில் ரயில்வே பீடர் ரோட்டில் அல்லித்தெருவில் குழாய் பதிக்கும் பணிகளை சரிவர முடிக்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.
விருதுநகர் நகராட்சி 13வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி. இவரின் வார்டில் அல்லித்தெரு ரயில்வே பீடர் ரோட்டில் சந்திக்கும் இடத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பாலம் உடைத்து ரோடு தோண்டப்பட்டு பங்குனி பொங்கல் முன்பே பணிகள் நடந்தது.
ஆனால் குழாய் மேல் மட்டத்தில் பதிக்கப்பட்டதால் வாகனங்கள் சென்று சேதமாகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நகராட்சிக்கு புகார்கள் வந்ததால் மறுபடியும் குழாயை ஆழத்தில் பதிக்கும் பணிகள் நடந்து முடிந்தது. இதற்காக தோண்டப்பட்ட இடத்தில் தற்போது வரை ரோட்டை சரி செய்யாததால் வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு நடந்து, சைக்கிள், டூவீலரில் மட்டுமே செல்ல பேரிகார்டு வைத்துள்ளனர்.
இது குறித்து கவுன்சிலர் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.