/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சுகாதார வளாகம், துார்வாராத கண்மாய்கள்
/
செயல்படாத சுகாதார வளாகம், துார்வாராத கண்மாய்கள்
ADDED : பிப் 25, 2025 07:18 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்கள் இருந்தும் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக இருப்பதாலும், ஊரைச் சுற்றி உள்ள கண்மாய்கள் பராமரிப்பின்றி சுகாதார கேடாக இருப்பதாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலையம்பட்டி ஊராட்சி . இதில் 50 க்கும் மேற்பட்ட தெருக்கள், 10க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகள் கொண்ட பெரிய ஊராட்சி . புறநகர் பகுதிகளில் உருவாகி 30 ஆண்டுகளை கடந்த போதும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. புளியம்பட்டி நெசவாளர் காலனி, இ.பி., காலனி, இந்திரா நகர், வேல்முருகன் காலனி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.
பாலையம்பட்டி காசுக்காரர் தெரு பகுதியில் 3 பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டும் பயன்பாடின்றி கிடக்கிறது. இதே பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி காட்சி பொருளாக உள்ளது. இ.பி., காலனியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை இடித்து விட்டு புதியதாக அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். புறநகர் பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு ஆண்டுகள் ஆன போதிலும் தண்ணீர் வரவில்லை.
ஊருக்கு அருகில் குறவன் கண்மாய் செவல் கண்மாய் என இரு கண்மாய்கள் உள்ளன. இவற்றை துார்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு காலத்தில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்பட்ட கண்மாய் தற்போது பராமரிப்பு இன்றி ஆகாய தாமரைகள் வளர்ந்தும் ஊரின் ஒட்டுமொத்த கழிவு நீர் விடப்பட்டும் கழிவு நீர் குளங்களாக கண்மாய்கள் மாறிவிட்டது. குறவன் கண்மாயில் குளித்தால் உடம்பில் அரிப்பு ஏற்படுவதாகவும், தண்ணீர் இருந்தும் விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாமல் கெட்டுவிட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கண்மாயை துார்வாரி சுற்றிலும் தடுப்புச் சுவர் கட்டி பராமரிக்க வேண்டும் என்பது மக்களின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது. ஊராட்சியில் போதுமான துாய்மை பணியாளர்கள் இல்லை. புறநகர் பகுதிகளில் குப்பை வாங்க பணியாளர்கள் செல்வது இல்லை. இதனால் குப்பையை ரோடு ஓரங்களில் எரிக்கின்றனர். ஊராட்சி மூலம் வழங்கப்படும் தாமிரபரணி குடிநீர் ஊருக்குள் மட்டும் வருகிறது. ஒரு சில புறநகர் பகுதிகளுக்கு வருவது இல்லை. பாலையம்பட்டி ஊராட்சி முதல் நிலை ஊராட்சியாகவும், அதிகமான வருவாய் கொண்ட ஊராட்சியாக இருந்த போதிலும், அதிக மக்கள் தொகை அதிகமான புறநகர் பகுதிகள் இருப்பதால் போதுமான அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் ஊராட்சி திணறுகிறது.
செயல்படாத சுகாதார வளாகம்
சித்ரா, குடும்பதலைவி: பாலையம்பட்டியில் உள்ள காசுக்காரர் தெரு பகுதியில் 3 பெண்கள் சுகாதார வளாகம் இருந்தும் பராமரிப்பு இன்றியும் தண்ணீர் இல்லாமல் போனதால் பயன்படுத்த முடியவில்லை. சுகாதார வளாகத்தை சுற்றி முட்செடிகளும் புதர்களும் இருப்பதால் பாம்புகள் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. கழிப்பறையை பயன்படுத்த முடியாததால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.
சுகாதாரக் கேட்டில் அங்கன்வாடி மையம்
முருகேஸ்வரி, குடும்ப தலைவி: அங்கன்வாடி அருகில் உள்ள ரோட்டை தான் மக்கள் திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதில் ஏற்படும் துர்நாற்றத்தால் இங்குள்ள குழந்தைகள் அவதிப்படுகின்றனர். அங்கன்வாடி மையத்தை சுற்றி உள்ள முட்புதர்களை அகற்றியும், ரோட்டை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தக்கூடாது என ஊராட்சி அறிவுறுத்த வேண்டும்.
குடிநீர் இல்லை
அம்சவள்ளி, குடும்ப தலைவி: ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் முறையாக வருவது இல்லை. பல பகுதிகளில் தாமிரபரணி குடிநீரே வருவது இல்லை. ஊரில் மேல்நிலைத் தொட்டிகள் தான் அதிகமாக உள்ளது. இருந்தும் போதுமான குடிநீர் வழங்குவது இல்லை. குடிநீருக்கும் புழக்கத்திற்கும் தண்ணீர் இன்றி சிரமப்படுகிறோம். முறையாக குடிநீர் வழங்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.