/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத மதகுகள், சேதமான கரைகள் அவதியில் அம்மன் கோவில்பட்டி புதுார் கண்மாய் விவசாயிகள்
/
செயல்படாத மதகுகள், சேதமான கரைகள் அவதியில் அம்மன் கோவில்பட்டி புதுார் கண்மாய் விவசாயிகள்
செயல்படாத மதகுகள், சேதமான கரைகள் அவதியில் அம்மன் கோவில்பட்டி புதுார் கண்மாய் விவசாயிகள்
செயல்படாத மதகுகள், சேதமான கரைகள் அவதியில் அம்மன் கோவில்பட்டி புதுார் கண்மாய் விவசாயிகள்
ADDED : ஜூலை 25, 2024 03:59 AM

விருதுநகர்: கண்மாயின் மதகுகள் செயல்படாமல் இருப்பதாலும், துார்வாராததாலும் நீரை தேக்க முடியவில்லை, கரைகள் முறையாக புனரமைக்கப்படாமல் முழுவதும் சேதமாகி இருப்பதால் கண்மாய் நிரம்பும் போது உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளதால் அம்மன் கோவில்பட்டி புதுார் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதுார் கண்மாய் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்கண்மாய்க்கு மருதம்நத்தம், செங்குன்றாபுரம், மூளிப்பட்டி, சங்கரலிங்காபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் நீர்வரத்து ஓடைகள் மூலம் தண்ணீர் வருகிறது.
இங்கு எப்போது தண்ணீர் வற்றாமல் காணப்படுகிறது. இந்த கண்மாய் நீர் மூலம் 70 ஏக்கரில் நெல், வாழை, மானாவாரி பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய் துார்வாராததால் மண் நிறைந்து, தண்ணீர் இருந்தும் தேக்க முடியாத நிலை உள்ளது. மேலும் கரைகள் முறையாக புனரமைக்கப்படாததால் ஆங்காங்கே சிதிலமடைந்து உள்ளது. இதனால் கரைகளை பலப்படுத்த ரோட்டின் ஓரங்களில் கற்கள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கரைகள் புனரமைக்கப்படவில்லை.
கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் மதகுகள் செயல்படவில்லை. இப்பகுதியில் கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் சேதமாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில்உள்ளது. கண்மாய்க்குள்புதர்கள், நீர் செடிகள் வளர்ந்து நிறைந்து இருப்பதால் குளிக்கும் பலருக்கு தோல் பிரச்னைகள் ஏற்படுகிறது.
நீரை வெளியேற்றும் கால்வாய் முழுவதும் புதர் மண்டி, அதன் கரைகள்இருக்கும் இடம் தெரியாத நிலையில் உள்ளது. கண்மாயை துார்வார வேண்டும் என பல முறை தெரிவித்தும் தண்ணீர் வற்றாமல் இருப்பதை காரணம் காட்டி பணிகளை செய்யப்படவில்லை. மழைக்காலத்தில் நீர் வெளியேறும் போது ஊருக்குள் செல்லும் தரைப்பாலம் மூழ்கிவிடுவதால் மக்கள் செய்வதறியாது பரிதவிக்கின்றனர்.
மதகுகளை சீரமையுங்கள்
லெட்சுமணன், விவசாயி: கண்மாயின் மதகுகள் சேதமாகி பல ஆண்டுகளாகியும் புனரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீரை இருந்தாலும் தொடர்ந்து தேக்க முடியாத நிலை உள்ளது. எனவே மதகுகளை புனரமைத்து மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரைகளை பலப்படுத்துங்கள்
ஈஸ்வரன், விவசாயி: கண்மாய் கரைகள் சீரமைத்து 10 ஆண்டுகளை கடந்து விட்டதால் வலுவிழந்து உள்ளது.
இதை பாதுகாக்க கற்கள்கொண்டு தடுப்புகள் கட்டப்பட்டாலும், சிறிது துாரம் மட்டுமே கட்டப்பட்டுள்ளதால் மற்ற பகுதியில் உள்ள கரைகள்எப்போது இடியும் என்ற நிலையில் உள்ளது. இதனால் கரைகளை உடனடியாக புனரமைப்பதற்கான பணிகளை செய்ய வேண்டும்.
கால்வாயை புனரமைக்க வேண்டும்
கண்ணன், விவசாயி: கண்மாய் நீர் வெளியேறும் கால்வாயில் கரைகள், வழித்தடங்கள் முழுவதும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் கால்வாய் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. எனவே கால்வாயை புனரமைக்கும் பணிகளை கோடை காலம் முடியும் முன்பு துவங்க வேண்டும்.