/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணி கழிவு நீரால் துர்நாற்றம், சேதமடைந்த வீதிகள்
/
ஊருணி கழிவு நீரால் துர்நாற்றம், சேதமடைந்த வீதிகள்
ADDED : பிப் 23, 2025 05:59 AM

காரியாபட்டி : கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசு, புழுக்கள் வருவதால் அருவெறுப்பு, குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சீரமைக்காததால் வீதியில் நடமாட சிரமம், நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டாததால் அடிக்கடி ஏற்படும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் செவல்பட்டியில் ஊருணியில் கழிவு நீர் தேங்குகிறது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. குடியிருப்புகளுக்குள் புழுக்கள் சுற்றித் திரிவதால் அருவருப்பாக காணப்படுகிறது. குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடவில்லை. பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மக்கள் இடறி விழுகின்றனர். பெரும்பாலான வீதிகளில் சுத்தம் செய்யாமல் புதர்மண்டி கிடக்கிறது.
மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தொடர் விபத்து காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். தேவையான அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்
பாண்டியராஜன், வக்கீல்: கோர்ட் வளாகம் முன் உள்ள ஊருணியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் மக்கள் நடமாட முடியவில்லை. கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. குடியிருப்பு வாசிகள் குடியிருக்க முடியவில்லை. கழிவு நீரை வெளியேற்றி தெப்பக்குளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீதிகளை சீரமைக்க வேண்டும்
பாலமுருகன், தனியார் ஊழியர்: குடிநீர் சப்ளை செய்ய வீதிகளில் பள்ளம் தோண்டினர். குழாய் பதித்து சரிவர மூடாததால் மேடும் பள்ளமாக உள்ளது. நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. இரவு நேரங்களில் இடறி விழுகின்றனர். பெரும்பாலான வீதிகளில் களை செடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. விஷப்பூச்சிகள் தங்கி வருகின்றன. அப்புறப்படுத்தி வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலம் வேண்டும்
சுரேஷ், தனியார் ஊழியர்: நான்கு வழிச் சாலை கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் மேம்பாலம் இல்லாததால் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் 5 விபத்துக்கள் நடந்தன. பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படுவதற்கு முன் மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.