/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபத்தான நிலையில் மேல்நிலைத் தொட்டி,
/
ஆபத்தான நிலையில் மேல்நிலைத் தொட்டி,
ADDED : மே 08, 2024 06:30 AM

காரியாபட்டி : இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி இருப்பதால் எந்த நேரம் விபத்து ஏற்படும் அச்சம், குளியல் தொட்டி சேதம் அடைந்து இருப்பதால் குளிக்க சிரமம், திறந்த வெளி கிணற்றில் குடிநீர் எடுப்பதால் தொற்று கிருமிகள் பரவும் அபாயத்தில் காரியாபட்டி இ. தாமரைக்குளம் குடியிருப்போர் உள்ளனர்.
குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கணேசன், கூடலிங்கம், மருதுபாண்டி, செந்தாமரைக்கண்ணன், தென்னமராசா, மகாலிங்கம் கூறியதாவது:
இங்கு ஆறு முக்கிய வீதிகள் உள்ளன. இதில் 2 வீதிகளில் மட்டுமே பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மற்ற வீதிகளில் கற்கள் பதிக்காததால் மழை நேரங்களில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக கிடக்கிறது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி கிடையாது.
இதனால் வீதியில் கழிவு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி, பகலிலே கடிக்கிறது. தற்காலிக கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது.
சமுதாயக்கூடம், நாடக மேடை கிடையாது. பணிக்குறிப்பு கிராமத்திலிருந்து வரும் ரோடு படுமோசமாக உள்ளது. நிழற்குடை சேதம் அடைந்துள்ளது. தண்ணீர் சப்ளை செய்ய 25 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது.
தற்போது பில்லர்கள் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது வரை செயல்பாட்டில் உள்ளன. எடை தாங்காமல் எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சம் உள்ளது. அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவர்கள் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பர். எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலை இருக்கிறது.
குளியல் தொட்டி சேதம் அடைந்துள்ளது. தற்போது குளிக்க சிரமமாக இருக்கிறது. ஊரணியில் தண்ணீர் கிடப்பதால் ஆண்கள், பெண்கள் ஒரே இடத்தில் குளிக்க வேண்டியிருக்கிறது. தொற்று கிருமிகள் பரவும் அபாயம் இருக்கிறது.
ஊரணியை தூர் வாரி, சுற்றுச்சுவர் எழுப்பி படித்துறை கட்ட வேண்டும். தாமிரபரணி பைப் உள்ளது. தண்ணீர் சப்ளை இல்லை. திறந்தவெளி கிணற்றில் குடிநீர் எடுத்து வருகிறோம். இதில் தூசிகள் படிந்து, குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. குடிக்க சுவையாக இருப்பதால் வேறு வழியின்றி இதனை பயன்படுத்தி வருகிறோம்.
வேறு இடத்திலிருந்து குடிநீர் சப்ளை செய்யா விட்டாலும் பரவாயில்லை. இந்த கிணற்றை தூர்வாரி பாதுகாப்பு வளையம் அமைத்து, மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடைக்கு நிரந்தர கட்டடம் வேண்டும். வாறுகால் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இங்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம் என்றனர்.

