/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மார்ச் 3ல் பிளஸ் 2 தேர்வு துவக்கம்
/
மார்ச் 3ல் பிளஸ் 2 தேர்வு துவக்கம்
ADDED : பிப் 26, 2025 07:20 AM
விருதுநகர்: தமிழகத்தில் மார்ச் 3ல் பிளஸ் 2 தேர்வு துவங்கவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் 98 தேர்வு மையங்களில் 222 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 176 மாணவர்கள் எழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ல் துவங்குகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 222 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 176 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக 98 தேர்வு மையங்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 137 மாற்றுத்திறனாளிகள் எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுத தரைத்தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வையற்றோருக்கு, சொல்வதை கேட்டு எழுதுபவர்கள் உதவ ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். பிளஸ் 1 தேர்வு மார்ச் 5ல் துவங்குகிறது. இதிலும் 222 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 023 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். விடைத்தாள் திருத்தும் மையங்களாக விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் கூறியதாவது: மாணவர்கள் ஆரோக்கியமான உணவு உண்டு, நன்றாக துாங்கி எழுந்து தேர்வு எழுத வர வேண்டும். ஏற்கனவே இருமுறை மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பயப்படாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும், என்றார்.