மணப்பெண் மாயம்
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சமுசிகாபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் செல்வரத்தினம். ராஜபாளையம் தீயணைப்பு துறையில்பணிபுரிகிறார். மனைவி ஜானகி ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி காப்பாளர். இரண்டு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் மகள் ஜெஸி சுரேகா 21, பட்டப்படிப்பு முடித்தவருக்கு தந்தையின் சகோதரி மகன் அபிஷேக் உடன் திருமணத்திற்கு ஏற்பாடு நடந்துள்ளது. ஜன.14ல் நிச்சயம் முடிந்து வரும் 16ம் தேதி திருமணத்திற்கான பத்திரிக்கை அடித்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெஸி சுரேகாவை காணவில்லை. தாய் ஜானகி புகாரில் கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தனியாக நின்றவரிடம் வழிப்பறி
சேத்துார்: சேத்துார் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் 48, ராஜபாளையம் தென்காசி ரோடு சோலைசேரி விலக்கு நின்றிருந்தபோது பின்னால் ஒரே டூவீலரில் வந்த நான்கு பேர் கத்தியை காட்டி பர்சில் வைத்திருந்த ரமேஷ், அவரது மனைவி இருவரது ஏ.டி.எம் கார்டு ரகசிய எண்ணை மிரட்டி வாங்கியதுடன் அவர் வைத்திருந்த 20000 மதிப்புள்ள அலைபேசியை பிடுங்கி சென்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு தப்பினர். விசாரணையில் நக்கனேரியை சேர்ந்த காந்தி, மணிகண்ட ஜோதி, ராஜபாளையம் மங்காபுரத்தை சேர்ந்த அய்யனார், காளிராஜ் என தெரிந்தது. சேத்துார் ஊரக போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட காந்தியை 19, கைது செய்து மற்ற 3பேரை தேடுகின்றனர்.
கிராவல் மண் கடத்தல்
சேத்துார்: சேத்துார் மாரியம்மன் கோயில் அருகே மண்டல துணை தாசில்தார் ஆண்டாள் மணல் திருட்டு சம்பந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியே வந்த டாரஸ் லாரியை நிறுத்தியதில் உரிய அனுமதி சீட்டின்றி கிராவல் மண் கொண்டு செல்வது தெரிந்தது. லாரி டிரைவர் விட்டு தப்பியதால் கிராவல் மண்ணுடன் வாகனத்தை பறிமுதல் செய்து லாரி உரிமையாளர் குறித்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் 11 தொழிலாளர்கள் காயம்
தளவாய்புரம்: சிவகிரி தாலுகா ராயகரியை சேர்ந்தவர் பால்ராஜ் 32, ஆட்டோ வைத்துள்ளார். சேத்துார் அருகே உள்ள ராஜபாளையத்தை சேர்ந்த சஞ்சீவி ராஜா என்பவருக்கு சொந்தமான கரும்பு காட்டிற்கு ஆட்டோவில் அதே பகுதி, அருகாமை கிராமங்களை சேர்ந்த 10 கரும்பு வெட்டு கூலி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த போது அசையா மணி விலக்கு பகுதி கோரையார் காலனி பஸ் ஸ்டாப் அருகே முன்னால் சென்ற டூவீலர், பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த ஆட்டோ மீது எதிர்பாரா விதமாக மோதியது. இதில் கரும்பு வெட்டு கூலி தொழிலாளர்கள் சுடலைமுத்து 35, மாரியம்மாள் 37, மாதா 36, ராமலட்சுமி 40, பொன்னம்மாள் 60, உள்ளிட்ட 11 பேர் பலத்த காயமடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு தயாரிப்பு: 2 பேர் மீது வழக்கு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அயன்கரிசல்குளம் கிராமத்தில் தென்னந்தோப்பில் தகர செட் அமைத்து அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவர் மீது நத்தம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெள்ளபொட்டல் வி.ஏ.ஓ. வேலம்மாள் நேற்று முன்தினம் அயன்கரிசல்குளம் கிராம பகுதிகளில் ரோந்து செல்லும் போது, கருப்பசாமி, 40, என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தகர செட் அமைத்து, எந்த விதமான அரசு அனுமதி இல்லாமல் பட்டாசுகள் தயாரித்து, ஒரு வேனில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்ல வைத்திருந்ததை கண்டறிந்தார்.
இதனையடுத்து பட்டாசுகளையும், வேனையும் பறிமுதல் செய்து நத்தம் பட்டி போலீசில் ஒப்படைத்தார். அவரது புகாரில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட திருத்தங்கல் பரமசிவன், 48, கருப்பசாமி,40, ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.