----வங்கி ஊழியரை தாக்கியவர் கைது
விருதுநகர்: சூலக்கரை யூகோ வங்கியின் ஊழியர் சிவசந்திரன் 40. இவர் வங்கியில் பணியில் இருந்த போது நேற்று முன்தினம் மதியம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோதி முத்து ராமலிங்கம் 39, கத்தியால் அடித்ததில் சிவசந்திரன் காயமடைந்தார். சூலக்கரைப் போலீசார் ஜோதி முத்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.
அழுகிய நிலையில் பெண் உடல்
தளவாய்புரம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் பகுதியில் நக்கனேரி ரோடு தனியார் கிணற்றில் அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பச்சை நிறத்தில் சேலை உடுத்தியிருந்தார். அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணமுடியவில்லை. சேத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி பெண் பலி
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் மூக்கையா 57, இவரது மனைவி விஜயலட்சுமி 45, இவர்கள் தற்போது விருதுநகர் மாடர்ன் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிளவக்கல் அணைக்கு அருகில் உள்ள தங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பை பார்க்க, விஜயலட்சுமி சென்றபோது, மின்சார வயர் அறுந்து விழுந்ததில் பலியானார். கூமாபட்டி போலீசார் விசாரித்தனர்.

