ADDED : ஆக 07, 2026 05:11 PM
டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை
*தள்ளாடும் சிவகாசி அரசு மருத்துவமனை
சிவகாசி, ஆக. 8-
சிவகாசி அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் தள்ளாடுகிறது. எனவே இங்கு டாக்டர்கள் பற்றாக்குறையை நீக்குவதோடு கூடுதல் பணியிடங்களையும் ஒதுக்க வேண்டும்.
சிவகாசி அரசு மருத்துவமனை தற்போது 140 படுக்கைகள் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 550 வெளி நோயாளிகள் வருகின்றனர். 140 உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். ஒரு மாதத்தில் 120 பிரசவங்கள், 24,500 ஆய்வக பரிசோதனைகள், 161 பெரிய அறுவை சிகிச்சைகள், 318 சிறிய அறுவை சிகிச்சைகள் நடக்கிறது.
மேலும் இம்மருத்துவமனையில் விபத்து , அவசர சிகிச்சைப் பிரிவு திறன்மிகு தீக்காய சிகிச்சைப் பிரிவு பச்சிளங்குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 6 தளங்களுடன் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்புதிய மருத்துவ கட்டடத்தில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் 50 படுக்கை வசதிகள், மகப்பேறு ,குழந்தைகள் நல பிரிவில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் 150 படுக்கைகள் அதிகரித்து 290 படுக்கை வசதிகள் உள்ளது.
இங்கு இத்தனை வசதிகள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். தீக்காய சிகிச்சை பிரிவிற்கு என தனி டாக்டர் இல்லாததால் ராஜபாளையத்திலிருந்து வந்து டாக்டர் பார்க்கின்றார். சிவகாசியில் நிரந்தர டாக்டர் நியமிக்க வேண்டும். இதேபோல் ஸ்கேன் டாக்டர், அறுவை சிகிச்சை , மகப்பேறு, குருதி பகுப்பாய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும். தற்போது புதிய மருத்துவமனை கட்டடம் திறக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 4 டாக்டர்கள், 8 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். இந்தப் பணியிடங்களை நிரப்புவதுடன் கூடுதல் பணியிடங்களையும் ஒதுக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் வரும் மக்கள் நோயாளிகளின் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் பாதையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் ஆம்புலன்ஸ் வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர், மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ள நிலையில் டாக்டர்கள் ,செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். பல தளங்களில் கட்டட வசதி, புதிய பிரிவுகள் , கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி, டாக்டர்கள் , செவிலியர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு கூடுதல் ஆட்களை நியமித்து மக்கள் சிரமமின்றி சிகிச்சை பெற்று செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
மைக்கேல், தனியார் ஊழியர், அவ்வப்போது ஏற்படும் பட்டாசு விபத்தினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தீக்காய சிறப்பு பிரிவு உள்ளது. ஆனால் டாக்டர்கள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.
தீர்வு : அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக பல்வேறு வசதிகள் உள்ளது. இங்கு டாக்டர்கள் பற்றாக்குறையை நீக்குவதோடு கூடுதல் பணியிடங்களையும் ஒதுக்கும் பட்சத்தில் மக்கள் பெரிதும் பயனடைவர். மருத்துவமனை வளாகத்தில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஏற்படுத்தி தர வேண்டும். இதனால் நெருக்கடியை தவிர்க்க முடியும்.
