ADDED : ஆக 21, 2024 06:59 AM

சாத்துார் : சாத்துார் போக்குவரத்து நகருக்கும் சாத்துாருக்கும் ஆற்றுக்குள் தரைமட்ட பாலம் அமைத்து தருவோம் என தேர்தல் தோறும் வாக்குறுதியாக அரசியல் கட்சியினர் கூறுவதோடு நின்று விடுகின்றனர்.
வெற்றி பெற்றபின் அதை மறந்து விடுகின்றனர், என சாத்துார் போக்குவரத்து நகர் குடியிருப்போர் குமுறுகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட போக்குவரத்து நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் தலைவர் பசீர்உசேன், உதவி தலைவர் ெசல்லத்துரை பாண்டியன்,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் பரசுராமன்.
அப்துல்சலீம், தனசேகர், பரசுராமன் ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது:
நகரில் ரோடு, தெருவிளக்கு,, வாறுகால் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் இல்லை.தெருக்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் ரோடு போடப்பட்டு வாறுகால் கட்டப்பட்டது.
ஆண்டுகள் பல ஆனதால் தார் ரோடு முழுவதும் சேதமடைந்து கரடுமுரடான மண் சாலையாக மாறிவிட்டது. வாறுகாலும் இடிந்து விட்டது. சிறிய மழை பெய்தாலும் பள்ளத்தில் மழை நீரும் கழிவு நீரும் குளம் போல் தேங்கி விடுகிறது.
பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், பள்ளி வேன்கள் மழைக்காலத்தில் தத்தளித்துச் செல்லும் நிலை உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மழைக்காலத்தில் வீடுகளுக்கு தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல முடியாமல் ரோட்டிலேயே நிறுத்திவிட்டு வீட்டிற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.
நகருக்கு அருகில் கரிமூட்டம் போடும் தொழில் செய்து வருகின்றனர். இரவு பகலாக கரிமூட்டம் போடுவதால் இதில் வரும் புகை காரணமாக குடியிருப்பு வாசிகள் கடும் அவதி படுகிறோம்.
ஊராட்சி நிர்வாகம் தான் அவர்களை வேறிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகருக்குள் டவுன் பஸ்கள் வந்து செல்ல வேண்டும். சாத்துார் நகருக்கு செல்ல ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மழைக்காலத்தில் தண்ணீர் ஓடுவதால் ஆபத்தான நிலையில் நான்கு வழி சாலை பாலத்தின் மீது நடந்து நகருக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கான தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும்,
நகருக்குள் கழிவுநீர் செல்ல வாறுகால் இல்லாததால் குடியிருப்பு வாசிகள் சோக்பிட்டு போட்டு நிலத்திற்குள் கழிவு நீரை கடத்தி வருகின்றனர்.
இவை நிரம்பி காலி இடத்தில் கழிவுநீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கலந்துரையாடினர்.

