
சிவகாசி : திருத்தங்கல் ரங்கா நகரில் தெருக்களில் ரோடு, வாறுகால் வசதி இல்லாமல் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து ரங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணம்மாள், விஜயலட்சுமி, இந்திரா, மருதாயி, தங்கம் கூறியதாவது, ரங்கா நகரில் உள்ள நான்கு தெருக்களில் ரோடு, வாறுகால் வசதி இல்லை.
இதனால் வீட்டுக் கழிவு நீர் வெளியேற வழி இல்லை. மாநகராட்சி சார்பில் 5 மாதங்களுக்கு முன்பு ரோடு போடுவதற்காக பணிகள் துவங்கியது. ஆனால் வாறுகால் வசதி ஏற்படுத்தாமல் ரோடு மட்டும் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம்.
ஏனெனில் தெருக்களில் குடியிருப்புகளின் கழிவுநீர், மழை நீர் வெளியேற வழி இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி தெருவிலேயே தேங்கி விடுகின்றது.
எனவே வாறுகால் அமைத்து ரோடு போட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதனால் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஜல்லிகள் பரப்பப்பட்ட நிலையில் கிடப்பதால் நடப்பதற்கு சிரமமாக உள்ளது.
குழந்தைகள், பெரியவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். தவிர கழிவு நீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி விட்டது. இதில் கொசு உற்பத்தியாகி தொற்று நோயால் அவதிப்படுகின்றோம். இப்பகுதியில் தெருவிளக்குகள் முழுமையாக இல்லாததால் இரவு நேரத்தில் வெளியே வர முடியவில்லை. நாய்கள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட நேரிடுகின்றது. இப்பகுதிக்கு வரும் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாக்கின்றது. மேலும் பயன்படாமல் உள்ள குடிநீர் தொட்டி அருகே போர்வெல் அமைக்கப்பட்டு வீணாக உள்ளது.
இதனை சரி செய்தால் புழக்கத்திற்கு தண்ணீர் சிரமமின்றி கிடைக்கும். மாநகராட்சிக்கு இங்கிருந்து முழுமையாக வரி கிடைக்கிறது ஆனால் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை, என்றனர்.