/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதர் மண்டிய நீர்வரத்து ஓடை; மண்மேவிய நீர் வெளியேறும் பாதை
/
புதர் மண்டிய நீர்வரத்து ஓடை; மண்மேவிய நீர் வெளியேறும் பாதை
புதர் மண்டிய நீர்வரத்து ஓடை; மண்மேவிய நீர் வெளியேறும் பாதை
புதர் மண்டிய நீர்வரத்து ஓடை; மண்மேவிய நீர் வெளியேறும் பாதை
ADDED : மே 23, 2024 02:40 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டபெத்தான் கண்மாய்க்கு நீர் வரும் பாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டியும், கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்தால் தண்ணீர் வெளியேறும் பாதை மண்மேவியும், கருவேல மரங்கள் முளைத்தும், ஆக்கிரமிக்கப்பட்டும் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நகரின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் செண்பகத் தோப்பு பேயனாறு, அத்தி துண்டு வழியாக மம்சாபுரம் பகுதி கண்மாய்களுக்கும், மறவன் குளம் கண்மாய் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து ஏற்படும்.
மறவன்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழும் தண்ணீர் மொட்டபெத்தான் கண்மாய்க்கு வருகிறது. அங்கிருந்து திருமுக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. அதன் பின்பு மீதமுள்ள தண்ணீர் வடமலைகுறிச்சி கண்மாய்க்கு கொண்டு செல்லப்படுகிறது. அதனையும் கடந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தால் பெரிய குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் வழித்தடங்கள் உள்ளது.
இதில் மறவன் குளம் கண்மாயிலிருந்து மொட்டபெத்தான் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து பாதையில் பல இடங்கள் சுத்தமாக இருந்தாலும், சில இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி தண்ணீர் வேகத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு உள்ளது.
கண்மாயின் உட்பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதால் கோடை காலத்தில் விரைவாகவே தண்ணீர் குறைந்து விடுகிறது. இக் கண்மாய் தெற்கு பகுதி மடையின் வழியாக திருமுக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் கழிவுகள் கட்டப்பட்டு அசுத்தமான தண்ணீரே திருமுக்குளத்திற்கு வரும் நிலையில் உள்ளது.
இந்த கண்மாயின் பிரதான மடையின் ஷட்டர்கள் மரப்பலகைகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்துவிட்டு இரும்பிலான ஷட்டர்கள் அமைக்க வேண்டும். இக்கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்தால் வடமலைகுறிச்சி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். ஆனால், நீர்வரத்து பாதை மண்மேவியும், செடி, கொடிகள் வளர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டும் காணப்படுவதால் வடமலைகுறிச்சி கண்மாய் நிரம்ப கால தாமதம் ஏற்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாயின் மூலம் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால், நகரின் விரிவாக்கத்தால் விவசாய நிலங்களின் பரப்பு குறைந்து தற்போது குடியிருப்பு பகுதியாக காணப்படுகிறது.
எனவே, இந்த கன்மாயையும், நீர் வரத்து மற்றும் நீர் வெளியேறும் பாதைகளை முழு அளவில் தூர்வாரினால் வடமலைகுறிச்சி கண்மாய் விரைவில் நிரம்பி பாசன வசதி வரும். இதற்கு கண்மாயை சீரமைக்க வேண்டுமென மொட்டபெத்தான் மற்றும் வடமலைகுறிச்சி கண்மாய் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

