/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சுற்றுச்சாலை திட்டம் செப்டம்பரில் துவக்கம்
/
சிவகாசி சுற்றுச்சாலை திட்டம் செப்டம்பரில் துவக்கம்
சிவகாசி சுற்றுச்சாலை திட்டம் செப்டம்பரில் துவக்கம்
சிவகாசி சுற்றுச்சாலை திட்டம் செப்டம்பரில் துவக்கம்
ADDED : ஆக 08, 2024 04:23 AM

சிவகாசி: 2012 ல் அறிவிக்கப்பட்ட சிவகாசி சுற்றுச்சாலை திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பின் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் பூவநாதபுரம் விலக்கில் இருந்து வடமலாபுரம் வரை 10.4 கிலோ மீட்டர் துார பணிகள் செப்டம்பரில் துவங்க உள்ளது.
சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், எரிச்சநத்தம் ஆகிய ரோடுகளை இணைத்து ரூ.150 கோடியில் சுற்றுச்சாலை அமைக்க 2012 ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தச் சுற்றுச் சாலை கீழத்திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, கொங்கலாபுரம், ஆனையூர், ஈஞ்சார் , வடபட்டி, நமஸ்கரித்தான்பட்டி, திருத்தங்கல் ஆகிய 10 வருவாய் கிராமங்கள் வழியே செல்லும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. 2021 ல் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், சுற்றுச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென மக்கள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து 2021 ல் சுற்றுச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பணிகள் வேகம் எடுக்கப்பட்டு, சுற்றுச் சாலை பணிக்காக 82 நில உரிமையாளர்களிடம் 132.8 ஹெக்டேர் பட்டா நிலம், அரசு நிலம் 14. 6 ஹெக்டேர் என மொத்தம் 147.4 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 33.5 கி.மீ. தொலைவு சுற்றுச் சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கியது.
சுற்றுச்சாலைக்கான முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. . சுற்றுச்சாலை பணி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக ஸ்ரீவில்லிபுத்துார் - - விருதுநகர் ரோட்டை இணைக்கும் வகையில் பூவநாதபுரம் விலக்கில் இருந்து வடமலாபுரம் வரை 10.4 கிலோ மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சாலை பணிகள் செப்டம்பரில் துவங்க உள்ளது. இந்த ரோட்டில் கீழத்திருத்தங்கல், ஆனையூர் பகுதியில் ரயில் பாதை உள்ள இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
மேயர் சங்கீதா கூறுகையில்: விருதுநகரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செல்வதற்கு சிவகாசி நகருக்குள் வராமல் செல்ல முடியும். சுற்றுச்சாலை திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது கழுகுமலை, சாத்துார், செல்வதற்கும் எளிதாக இருக்கும். இதன்மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும், என்றார்.