
சிவகாசி: செயல்படாத மகளிர் சுகாதார வளாகம், குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்த வெளி கிணறு என திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் எண்ணற்ற பிரச்னைகளால் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் ஒரு தெருவில் ஆறு மாதங்களுக்கு முன்பு ரோடு போடுவதற்காக பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் குழாய் பதிக்காததால் வாறுகால் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இங்கு உடனடியாக குழாய் பதிக்கப்பட்டு ரோடு போடும் பணியை துவக்க வேண்டும். தெருக்களுக்கு மத்தியில் செல்லும் ஓடை துார்ந்துள்ளது. இதில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து கழிவுநீர் வெளியேறவில்லை. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றது. வாறுகாலும் முழுமையாக துார்வாரப்படாததால் கொசு உற்பத்தியாகி தொற்று நோயினை ஏற்படுத்துகிறது.
ஜெயா, குடும்பத் தலைவி: இப்பகுதியில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் செயல்படவில்லை. மராமத்து பணி என்ற பெயரில் பெயிண்ட் மட்டும் அடிக்கப்பட்ட நிலையில் வேறு எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே தண்ணீர், மின்சார வசதி ஏற்படுத்தி தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ப்ரீத்தா, குடும்பத் தலைவி: குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்த வெளி கிணறு உள்ளது. அருகிலேயே தண்ணீர் பிடிக்கும் தொட்டியும் உள்ளதால் அச்சத்துடனே தண்ணீர் பிடிக்க வேண்டியுள்ளது. சிறிது அசந்தாலும் கிணற்றில் விழ வாய்ப்புள்ளது. ரோட்டின் ஓரத்திலும் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் தடுமாறி விழ வாய்ப்புள்ளது. மேலும் கிணறு முழுவதும் குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே கிணற்றினை நிரந்தரமாக மூட வேண்டும்.
அமராவதி, குடும்பத்தலைவி: தெருக்களில் பெரும்பான்மையான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். நாய்கள் தொல்லையால் குழந்தைகள், பெரியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.