ADDED : ஜன 17, 2025 04:53 AM
அருப்புக்கோட்டை: ரோடு போடாத தெருக்கள், உவர்ப்பு குடிநீர், வாறுகால் இல்லாததால் ஓடைகளில் விடப்படும் கழிவுநீர் என அருப்புகோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சி ராஜிவ் நகரில் மக்கள் பல்வேறு பிரச்னைகளால் அவதியடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதி ராஜிவ் நகர். இங்கு 8க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. நகர் உருவாகி 20 ஆண்டுகள் ஆன போதிலும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. 1வது தெருவில் ரோடு இன்றி, மேடும், பள்ளமுமாக இருப்பதால் டூவீலர்களில், நடந்து செல்பவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
வாறுகால் இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களின் பின்புறம் உள்ள ஓடையில் விடப்படுகிறது. மழைநீர் செல்ல வேண்டிய ஓடையில் ஒட்டுமொத்த தெருக்களின் கழிவுநீர் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
மழைக்காலத்தில் தெருக்கள் சேறும் சகதியுமாக இருப்பதால் டூவீலரில் செல்லும் போது சகதியில் சிக்கிக் கொள்கிறது. ஓடையில் கழிவு நீர் ஓடுவதால் பன்றிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. தெருக்களில் கூட்டம் கூட்டமாக தெரிகிறது. இதேபோன்று நாய்கள் தொல்லையும் அதிக அளவில் உள்ளது.
மெயின் ரோட்டில் இருந்து வரும் ஓடை 30 அடி அகலத்தில் உள்ளது. ராஜிவ் நகரை கடந்து செல்லும் இந்த ஓடையில் மழைநீர் அருகில் உள்ள கண்மாயில் சேரும் வகையில் அமைந்துள்ளது. ஓடையை தூர்வாரி பல ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஓடையின் இரு புறமும் தடுப்புச் சுவர் கட்டி மழை நீர் சீராக கண்மாய்க்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சகதியாகும் ரோடு
கலா தேவி, குடும்ப தலைவி: ராஜிவ் நகர் முதல் தெருவில் ரோடு அமைக்க ஊராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ரோடு இன்றி தெரு மேடும், பள்ளமும் ஆக உள்ளது. மழைக்காலத்தில் சகதியாக உள்ளது. பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. வயதானவர்கள் ரோட்டில் நடக்க சிரமப்படுகின்றனர்.
வாறுகால் இல்லை
ஜெயலட்சுமி, குடும்பதலைவி: தெருக்களில் வாறுகால் இல்லாததால் தெருவின் பின்புறம் உள்ள ஓடையில் கழிவு நீர் விட வேண்டியுள்ளது. ஓடை கொசுக்களின் கேந்திரமாக உள்ளது. தெருக்களில் வாறுகால், ரோடு அமைக்க ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது.
குடிநீர் இல்லை
அரசி, குடும்ப தலைவி: பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மற்ற பகுதிகளில் குடிநீர் நன்கு வருகிறது. எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதே இல்லை. ஊராட்சி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் உப்பு சுவையாக இருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் போடப்பட்ட குழாய்களில் தண்ணீர் வருவது இல்லை. குடிநீரை அதிக விலை கொடுத்து தான் வாங்கி பயன்படுத்துகிறோம்.