/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வரி உயர்வை சாதகமாக பயன்படுத்தி மக்களிடம் பணம் பறிப்பு
/
வரி உயர்வை சாதகமாக பயன்படுத்தி மக்களிடம் பணம் பறிப்பு
வரி உயர்வை சாதகமாக பயன்படுத்தி மக்களிடம் பணம் பறிப்பு
வரி உயர்வை சாதகமாக பயன்படுத்தி மக்களிடம் பணம் பறிப்பு
ADDED : மார் 11, 2025 04:29 AM
ராஜபாளையம்: வரி உயர்வை சாதகமாக பயன்படுத்தி அதிகாரிகள் மக்களிடம் பணம் பறிக்கின்றனர் என ராஜபாளையம் -நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டை எழுப்பினார்.
ராஜபாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. கமிஷனர் நாகராஜ், துணைத் தலைவர் கல்பனா, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 144 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ஏ.டி.சங்கர் கணேஷ், (காங்.,): சொத்து வரி உயர்வை சாதகமாக பயன்படுத்தி சில அதிகாரிகள் மக்களிடம் பணம் பறிக்கின்றனர். நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்கு ரூ.9 லட்சம் செலவான நிலையில், இதை மாற்றி குடிநீர் வடிகால் வாரியம் ரூ. 14 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு 6 சதவீத உயர்வு 1 சதவீத வட்டி கவுன்சிலர்களின் அனுமதியின்றி வரி உயர்த்தப்படுகிறது.
நாகராஜன், கமிஷனர்: பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.
ராதா, (தி.மு.க.,): கடந்த ஆண்டு சொத்துவரி ரூ. 300 செலுத்தியவர்களுக்கு தற்போது ரூ.900 என உயர்த்தப்பட்டுள்ளது. வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டால் மின் உபயோகத்தின் அடிப்படையில் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
முத்துச்செல்வம், வருவாய் அலுவலர்: கடந்த ஆண்டை விட 15 சதவீதம் வரி வசூல் அதிகரித்தால் தான் மானியம் கிடைக்கும் என துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்காக வரியை உயர்த்தும்போது சில இடங்களில் தவறுகள் நடந்திருக்கும். முறையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுமதி, (தி.மு.க.,): தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு குறித்து புகார் அளித்து 15 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை.
ஞானவேல், (தி.மு.க.,): தாமிரபரணி கூட்டுக் குடிநீர் தினமும் சாக்கடையில் வழிந்து வீணாகிறது. தகவல் தெரிவித்தாலும் உடனடி நடவடிக்கை இல்லை.
பவித்ரா, நகராட்சி தலைவர்: பாதாள சாக்கடை நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது தாமிரபரணி திட்டம் இன்னும் ஒப்படைக்கப்படாததால் இந்த சிக்கல் ஏற்படுகிறது. சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
முகமது ரபீக்,( தி.மு.க.,): தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு தேவை இல்லாதது. இவற்றை கொண்டு வந்து மக்களுக்கு சிரமத்தை அளிக்கின்றனர்.
மீனாட்சி, (அ.தி.மு.க.,): 2022ல் இருந்து ஓடை துார் வாரவும், 8 சிறு பாலங்கள் சீரமைக்கவும் மனு அளித்து பணி நடைபெறவில்லை. மண்மேவி காணப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.