/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆழப்படுத்தி நீர்வள ஆதாரத்துறை கண்மாயாக மாற்ற எதிர்பார்ப்பு : விருதுநகர் ஆமத்துார் விவசாயிகள் ஏக்கம்
/
ஆழப்படுத்தி நீர்வள ஆதாரத்துறை கண்மாயாக மாற்ற எதிர்பார்ப்பு : விருதுநகர் ஆமத்துார் விவசாயிகள் ஏக்கம்
ஆழப்படுத்தி நீர்வள ஆதாரத்துறை கண்மாயாக மாற்ற எதிர்பார்ப்பு : விருதுநகர் ஆமத்துார் விவசாயிகள் ஏக்கம்
ஆழப்படுத்தி நீர்வள ஆதாரத்துறை கண்மாயாக மாற்ற எதிர்பார்ப்பு : விருதுநகர் ஆமத்துார் விவசாயிகள் ஏக்கம்
ADDED : மே 09, 2024 04:57 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துார் கண்மாய் ஒரு காலத்தில் முப்போக சாகுபடிக்கு விளைச்சல் தந்த நிலையில், தற்போது ஒரு போக சாகுபடிக்கு கூட நீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு கண்மாயை கருவேல மரங்கள், ஆகாயத்தாமரைகள், கழிவுநீர் பாடாய்ப்படுத்தி வருகின்றன.
விருதுநகர் அருகே ஆமத்துாரின் கண்மாய் சிவகாசி ரோட்டிலே அமைந்துள்ளது. பெரிய ஊராட்சியான இங்கு கண்மாயும் உள்ளது.இந்திய சுதந்திரத்திற்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த கண்மாய் உள்ளாட்சி துறைக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. 300 ஏக்கர் இருந்தால் மட்டுமே அப்போது சேர்ப்பர். அப்போது குறைவாக இருந்தது.
ஆனால் இப்போது 300 ஏக்கரை தாண்டி நீரின் பரப்பு அதிகரித்து விட்டது. கண்மாய் இன்னும் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறைக்கு மாற்றப்படவில்லை. நீர்வள ஆதாரத்துறை, வருவாய்த்துறை நினைத்தால் தான் இக்கண்மாயை கொண்டு வர முடியும். அத்துறைக்கு ஒதுக்கினால் தான் இந்த கண்மாய்க்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இல்லையெனில் பணம் பெரிதாக ஒதுக்கப்படமாட்டாது.
ஒன்றிய கண்மாயாக இருப்பதால் குறைந்த அளவிலே நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் ஒரு பகுதியில் கூட உருப்படியான வேலை செய்ய முடிவதில்லை. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறைக்கு ஆமத்துார் கண்மாயை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆமத்துார் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு காலத்தில் முப்போக விளைச்சலுக்கு நீர் தந்த இந்த கண்மாய் இப்போது இவ்வூரை சுற்றி மானாவாரி நிலங்களுக்கு நிலத்தடி நீரை மட்டுமே கொடுக்கிறது. கண்மாய் நீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.
இன்று வரை இந்த கண்மாய்க்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பது கருவேல மரங்கள். புதிய பிரச்னையாக கடந்த பருவமழையில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரைகளும் தற்போது பெரிய தலைவலியாக உள்ளது. ஊரின் கழிவுநீர் மொத்தமாக ஊருணி, கண்மாயில் கலப்பதாலும், பாலிதீன் குப்பை கொட்டப்படுவதாலும் நீரின் சுவை மாறிவிட்டது.
ஆமத்துார் ஊராட்சியின் நிலத்தடி நீரால் பலருக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. முன்பு இந்த கண்மாய் தண்ணீரை மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்கே பயன்படுத்தி வந்தனர். தற்போது கை, கால் நனைக்க கூட அச்சப்படும் சூழல் தான் உள்ளது. கண்மாயை ஆழப்படுத்தவும், மீண்டும் கழிவுநீர் கண்மாயில் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வாக கண்மாயை நீர்வள ஆதாரத்துறை கண்மாயாக மாற்றுவது தான் என்றும் நினைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நீரால் உப்புச்சத்து அதிகரித்து பலர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். கழிவுநீரை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கண்மாய் ஆமத்துார் ஊராட்சி மக்கள், விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரம். கண் முன்னே பாழாகி வருவது வேதனை தருகிறது. நீர்வள ஆதாரத்துறை கண்மாயாக மாற்றப்பட்டால் அரசிடம் நிதி பெற்று ஆழப்படுத்த தேவையான முயற்சிகளை எடுப்போம். பலர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைந்து கண்மாயை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலசுப்பிரமணியன், விவசாயி, ஆமத்துார்.
எங்கள் ஊரில் முன்பு பிரதான தொழில் விவசாயம். ஆனால் இன்று பலர் அதை கைவிட்டு விட்டு பட்டாசு தொழிலாளியாக மாறி விட்டோம். இதற்கு எங்கள் ஊர் கண்மாய் மேவி நீரை தேக்குவது குறைந்தது தான் காரணம். கண்மாயை ஆழப்படுத்தி விவசாய பயன்பாட்டிற்கு உதவ வேண்டும்.
- பெத்து பாண்டி, தொழிலாளி, ஆமத்துார்.
கண்மாயில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த வேண்டும். கரைகளை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் கண்மாயில் கலக்காதவாறு தடுக்க வேண்டும். முக்கிய நீராதாரமான இங்கு பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் பெருகிவிட்டன. போர்க்கால அடிப்படையில் கண்மாயை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.
- இருளப்பசாமி, அப்துல் கலாம் விஷன் இந்தியா அமைப்பு, ஆமத்துார்.