/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரச்னையும் தீர்வும்... அணிவகுத்து நிற்கும் ஆம்னி பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் விருதுநகரில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் கொடுமை
/
பிரச்னையும் தீர்வும்... அணிவகுத்து நிற்கும் ஆம்னி பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் விருதுநகரில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் கொடுமை
பிரச்னையும் தீர்வும்... அணிவகுத்து நிற்கும் ஆம்னி பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் விருதுநகரில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் கொடுமை
பிரச்னையும் தீர்வும்... அணிவகுத்து நிற்கும் ஆம்னி பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் விருதுநகரில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் கொடுமை
ADDED : மார் 01, 2025 04:44 AM

விருதுநகர்: விருதுநகர் லெட்சுமிநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஆம்னி பஸ்கள் அணி வகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. இதனால் மதுரை, திருமங்கலம் செல்லும் அரசு பஸ்கள் நீண்ட நேரம் காத்திருப்பதோடு, அந்த வழியாக ஆம்புலன்ஸ்களும் காத்திருக்கும் கொடுமை அரங்கேறி வருகிறது.
விருதுநகர் நகராட்சியில் மருத்துவக்கல்லுாரி வந்த பின்பும், அதிகரித்து வரும் மக்கள் தொகையாலும் நாளுக்கு நாள் நகரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் அந்த தேவைக்கேற்ப ஏதாவது வசதிகள் செய்து தரப்படுவதில்லை. பல ஆண்டுகள் முயற்சிக்குபின் இப்போது தான் புது பஸ் ஸ்டாண்டே செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில் வேலை தேடும் இளைஞர்கள், கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள் பெருநகரங்களான சென்னை, திருச்சி, கோயம்புத்துார் , பெங்களூரு நகரங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் துவங்கி அனைத்து மாவட்டங்களில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட், நிறுத்தம் ஆகியவை பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் ஆம்னி பஸ்களுக்கு என தனி ஸ்டாண்ட் இல்லாததால் போக்குவரத்து பணிமனை எதிரில் உள்ள லெட்சுமிநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இது மற்ற நாட்களை காட்டிலும் அரசு விடுமுறை நாட்கள், வெள்ளி, சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் பெரும் கூட்ட நெரிசலை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வருவதால் குறைந்த பட்சம் கால் மணி நேரமாவது பயணிகளுக்கு காத்திருந்து ஏற்றி செல்கின்றன. இதனால் 10க்கும் மேற்குபட்ட வாகனங்கள் அந்த சர்வீஸ் ரோட்டில் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். அதே சர்வீஸ் ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளதால் மதுரை, திருமங்கலம் பஸ்கள் இந்த ஆம்னி பஸ்கள் பின்புறம் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. அதே போல் இவ்வழியாக செல்லும் ஆம்புலன்ஸ்களும் காத்திருக்க வேண்டிய கொடுமை ஏற்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு முன்பு வரை புது பஸ் ஸ்டாண்டில் தான் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி சென்றனர். எஸ்.இ.டி.சி., பஸ்கள் அதிகளவில் வந்து சென்றன. கொரோனா ஊரடங்கு பின் புது பஸ் ஸ்டாண்ட் காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டதால் பஸ்கள் லெட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. நான்கு ஆண்டுகள் ஆகியும், எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட நிலையில் லெட்சுமி நகர் பஸ் ஸ்டாப்பையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை வரிசையாக பஸ்கள் நிறுத்தப்பட்டு அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே ஆம்னி பஸ்களை புது பஸ் ஸ்டாண்டில் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இடையூறு அதிகம்
எங்கள் குடியிருப்பு பகுதியில் ஆம்னி பஸ்கள் நிற்பது இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இரவு 7:00 மணி முதலே வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. எதிர் திசையில் வாகனங்கள் வருவது தெரிவதில்லை. எனவே இதற்கென மாவட்ட நிர்வாகம் தனியாக வசதி ஏற்படுத்த வேண்டும்.
சங்கர், தொழில்முனைவோர், விருதுநகர்.
அதிகளவிலான கூட்டம்
மருத்துவ தேவை உள்ளிட்டவற்றிற்கு வெளியே சென்றுவர பெருமூச்சு விட வேண்டியுள்ளது. பண்டிகை நாள் விடுமுறைகளில் அதிகளவிலான கூட்டம் இருக்கும். அப்போது நடமாடவே முடியாது. இது போன்ற முக்கியமான வசதிகளை முறைப்படி ஏற்படுத்தி தர வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மக்களும் சிரமமின்றி வாழ முடியும்.
செண்பகவள்ளி, குடும்பத்தலைவி.