/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெப்பம்: மரங்களில் தஞ்சமடையும் பறவைகள்
/
வெப்பம்: மரங்களில் தஞ்சமடையும் பறவைகள்
UPDATED : மே 10, 2024 07:10 AM
ADDED : மே 10, 2024 01:57 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வெப்ப அலை காரணமாக பறவைகளை மதிய நேரங்களில் வெளியில் பார்க்க முடிவதே இல்லை. ஆங்காங்கே மரங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றன. தாங்க முடியாத இந்த வெயில் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளையும் பெரிய அளவில் பாதித்து வருகிறது.
கடந்த இரு வாரங்களாக விருதுநகரில் வெயில் சதமடித்து வருகிறது. நேற்று 106 பாரன்ஹீட் டிகிரி அளவு வெப்பம் பதிவானது. இன்றும் நாளையும் இதே வெப்பநிலை தான் இருக்கிறது. மாவட்டத்தில் காகம், புறா, சிட்டுக்குருவி, தவிட்டு குருவி, நீர் காகம், கொக்கு, குயில், வால் காக்கை, மைனா, உன்னி கொக்கு, அன்றில், பருந்து, மயில்போன்ற பறவைகள் பொது இனங்களாக பரவி பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
சாதாரண பருவ காலங்களில் காலை நேரங்களில் இரை தேடி விட்டு மாலை கூடு திரும்பும். கோடை காலங்களில் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை பறவைகள் கிடைத்த மரங்களில் தஞ்சமடைந்து ஓய்வெடுக்கும். ஆனால் தற்போதுவெப்ப அலை வீசும் காலகட்டமான இப்போது காலை கூட்டை விட்டு வெளியேறும் பறவைகள் அதீத சூடு காரணமாக காலை 8:00 மணிக்கே வேறு வேறு மரங்களில் தஞ்சமடைந்து விடுகின்றன.
மாலை 4:00 மணி வரை ஆங்காங்கே கிடைக்கும் மரங்களிலே இருந்து விட்டு, அருகில் உள்ள நீர்நிலைகளில் நீரை குடித்து விட்டு மாலை கூடு திரும்புகின்றன. தற்போது ஊருணிகள், கண்மாய்கள் என பல நீர்நிலைகள் வேக வேகமாக வற்றி வருவதால் அவை குடிநீருக்கு அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பறவைகள் சில மயங்கி விழுந்து இறக்கவும் செய்கின்றன.
பல்லுயிர் பெருக்கம் பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. வனத்துறை காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுகிறது. பறவைகளின் முக்கியத்துவம் பற்றி கூறுகிறது. ஆனால் எதையுமே கேட்காது கார்பன் சமநிலையை மக்கள் அதிகரிக்க செய்து விட்டதால் தற்போது கட்டுக்கடங்காத வெப்பம் வீசுகிறது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்ப அலையால் பறவைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
பறவை ஆர்வலர் தமிழ்வாணன் கூறியதாவது: வழக்கமாக கோடை காலங்களில் காலை 9:00 மணி வரையே பறவைகள் இரை தேடும். மீதமுள்ள நேரங்களில் மரங்களில் தஞ்சமடையும். தற்போது அதீத வெப்ப அலை காரணமாக பறவைகள் காலை 8:00 மணி வரையே இரை தேடுகின்றன. பிறகு மதிய நேரங்களில்கிடைத்த மரக்கிளைகளிலெல்லாம் ஓய்வெடுத்து, நீர்நிலைகளை தேடி அதில் குளித்து, குடித்து வெப்பத்தை தணித்து மாலை தான்கூடு திரும்புகின்றன.
பகலில் மரங்களில் ஓய்வெடுக்கும் நேரங்களில் அதீத சூடு காரணமாகவும், நீர் வறட்சி காரணமாகவும் மயங்கி விழுகின்றன.இதை தவிர்க்க மக்கள் வீடுகளின் மாடிகளில் நிழலாக உள்ள பகுதிகளில் தண்ணீர் வைக்கலாம்.விவசாய நிலங்களில் மர நிழலில் சிமென்ட் தரைத்தொட்டி அமைத்து பறவைகளுக்கு குடிநீர் வசதி செய்யலாம். முக்கியமாக இயற்கையாக உள்ள நீர்நிலைகளை மாசுப்படுத்தாமல் இருந்தாலே இந்த காலத்தில் பறவைகள் தப்பி பிழைத்து கொள்ளும். நீர்நிலைகளில் அதிகப்படியான பாலிதீன் குப்பைகளை வீசாமல் இருந்தால் அவை பயன்படுத்தும், என்றார்.