/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மடைகளை சரி செய்யாததால் ஊருக்குள் தண்ணீர்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
/
மடைகளை சரி செய்யாததால் ஊருக்குள் தண்ணீர்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
மடைகளை சரி செய்யாததால் ஊருக்குள் தண்ணீர்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
மடைகளை சரி செய்யாததால் ஊருக்குள் தண்ணீர்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : ஆக 17, 2024 12:50 AM

விருதுநகர் : திருச்சுழி தெற்குநத்தம் பெரிய கண்மாயில் மடைகளை சரி செய்யாததால் ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளதாக விருதுநகரில் நடந்த விவசாயிகள்குறைதீர் கூட்டத்தில் குமுறினர்.
தோட்டக்கலை துறை சார்பில் நாட்டு காய்கறி ரகங்கள், வாழை, பப்பாளி ரகங்கள், டிராகன் பழங்கள்,சிறுதானிய வகைகள், தோட்டக்கலை துறை திட்டங்கள் ஆகியவை கருத்து காட்சியாக அமைக்கப்பட்டன. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்தேவராஜ், வேளாண் இணை இயக்குனர் விஜயா, நேர்முக உதவியாளர் விவசாயம் நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி, வேளாண் விற்பனை, வணிக துணை இயக்குனர் ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
மங்கையர்கரசி, விருதுநகர்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மதிப்பு கூட்டு நிலையம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமச்சந்திரராஜா, ராஜபாளையம்: விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும்.
அம்மையப்பன், ராஜபாளையம்: தேவைப்படும் பகுதிகளில் இடுபொருள் கிட்டங்கிகள் அமைக்க வேண்டும், மாமரத்திற்கு இன்சூரன்ஸ் எப்போது தான் செயல்படுத்தப்படும்.
சுபாவாசுகி, துணை இயக்குனர், தோட்டக்கலை: இயக்குனரகத்திற்கு கோரிக்கை எழுதி அனுப்பி உள்ளோம்.
முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தாதம்பட்டியில் அதிகளவில் கொடுக்காப்புளி மரங்கள்உள்ளன. இவை பலத்த காற்றால் ஒடிந்துள்ளன. இதற்கு உரிய இழப்பீடுவழங்க வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் கணக்கெடுக்கவும், அடங்கலுக்கு பார்வையிடவும் வருவதே இல்லை.
ஜெயசீலன், கலெக்டர்: முறிந்த மரங்களை கணக்கெடுக்க வி.ஏ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்படும்.
சிவசாமி, காரியாபட்டி: சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் மண்வளம் காக்க பயிற்சி வழங்கப்படுமா.
நாச்சியார் அம்மாள், நேர்முக உதவியாளர்: இத்திட்டத்தில் பயிற்சி இல்லை. ஆனால் மண்வள அட்டை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் வழங்கப்படும் களை எடுக்கும் கருவிகள்உள்ளிட்ட வேளாண் கருவிகளும் தரமற்றதாக உள்ளன. தோட்டக்கலை விதைகளான தக்காளி, கத்தரி போன்றவை விவசாயிகள் வழங்கப்படாமல் உள்ளன. தனியாரில் அதிக விலைக்கு வாங்கும் சூழல் உள்ளது.
சுபாவாசுகி, துணை இயக்குனர், தோட்டக்கலை: 10 நாட்களில் அனைத்து விதைகளையும் வழங்கி விடுவோம்.
ராம்பாண்டியன், மாவட்ட தலைவர், காவிரி குண்டாறு கூட்டமைப்பு: மாவட்டத்தில் பல தோட்டங்களில் மீன் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக மீன்குட்டை அமைப்பது அதற்குரிய மானியம் தருவது போன்ற பணிகளை மீன் வளர்ச்சி கழகம் ஊக்குவித்து வருகிறது. ஆனால் இந்த பண்ணை குட்டைகளுக்கு தேவையான மின்சாரத்தை தனியாக மின்கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெற வேண்டும். மேலும் இதற்குரிய கட்டணத்தை மாதம் மாதம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் நிலை உள்ளது.
ஆனால் ராமநாதபுரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விவசாய பம்பு செட்டுகளுடன் மீன் குட்டைகளுக்கு இலவசமாக இணைப்பு வழங்குகின்றனர். அங்குள்ள அரசு விதிகளின்படி நமது விருதுநகர்மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகரிக்க இலவச மின்சார இணைப்பு உள்ள தோட்டங்களில் இத்தகைய மின் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
செல்வம், திருச்சுழி: தெற்குநத்தம் பெரிய கண்மாயில்உள்ள மூன்று மடைகள்சேதமாகி ஊருக்குள் தண்ணீர் வந்தது. தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. மீண்டும் பருவமழை வந்தால் ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளது.
ஜெயசீலன், கலெக்டர்: நேரடியாக அதிகாரிகள் கள ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
பாலமுருகன், மாநிலக்குழு உறுப்பினர், இந்திய கம்யூ: கன்னிசேரி புதுார் வீரபாண்டி கண்மாய் ஷட்டர் போய்விட்டது. கரையை சீர்படுத்தி ஷட்டரை மாற்றி கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
ஞானகுரு, மம்சாபுரம்: மாதம் 2வது வெள்ளிக்கிழமையின் முன்பு வனத்துறை குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.
பாலசுப்பிரமணியன், மம்சாபுரம்: மேலப்பாட்ட கரிசல்குளத்தில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மின் ஊழியர்கள் பற்றாக்குறையால் விளைநிலங்களில் மின்கம்பம் சரிந்தால் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
கணேசன், சிவகாசி: ஆனைக்குட்டம் பாசன ஆயக்கட்டு பரப்பில் வாடியூர் கிராமத்தின் 300 ஏக்கருக்கு விவசாய நிலங்களை சேர்க்க வேண்டும். அர்ஜூனா நதியில் பட்டாசு கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். கன்னிசேரி கண்மாயை துார்வார வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

