/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கனிம கொள்ளையில் யாருக்கு எவ்வளவு? சமூக வலைதளத்தில் உலா வரும் லஞ்ச டைரியில் விபரம்
/
கனிம கொள்ளையில் யாருக்கு எவ்வளவு? சமூக வலைதளத்தில் உலா வரும் லஞ்ச டைரியில் விபரம்
கனிம கொள்ளையில் யாருக்கு எவ்வளவு? சமூக வலைதளத்தில் உலா வரும் லஞ்ச டைரியில் விபரம்
கனிம கொள்ளையில் யாருக்கு எவ்வளவு? சமூக வலைதளத்தில் உலா வரும் லஞ்ச டைரியில் விபரம்
ADDED : பிப் 22, 2025 01:53 AM
விருதுநகர்:விருதுநகரில் நடந்த கனிமவள கொள்ளையில், யார், யாருக்கு எவ்வளவு கமிஷன், அரசு அலுவலர்களுக்கு எவ்வளவு லஞ்சம் வழங்கப்பட்டது என்பது குறித்து எழுதிய டைரி ஒன்றின் பக்கம், புகைப்படமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் ஜன., 28ல் ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்திற்கு அருகே உள்ள பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக கிராவல் மணல் திருட்டில் ஈடுபட்ட, 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில், சாத்துார் வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனி மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த கனிமவள கொள்ளை தடுக்க தவறியதாக சாத்துார் தாசில்தார் ராமநாதன், துணை தாசில்தார் நவநீதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வி.ஏ.ஓ. அஜீதா, கிராம உதவியாளர் குருசாமி உள்ளிட்ட ஐந்து வருவாய் துறையினர், நீர்வளத்துறை உதவி பொறியாளர், வேளாண் உதவி அலுவலர் முத்துகுரு உள்ளிட்ட ஏழு பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.
இதில், வேளாண் உதவி அலுவலர் முத்துகுரு சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது யார், யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரம் அடங்கிய 'டைரியின் பக்கம்' எனக் கூறப்படும் ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், கிராவல் விற்கப்பட்ட விபரம், கனரக வாகனங்களுக்கு பணம் வழங்கப்பட்ட விபரம், அரசு அலுவலர்களுக்கு பணம் வழங்கப்பட்ட விவரம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிப்., 16 முதல் சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதில், வெளிப்படை தன்மையோடு, டைரியின் உண்மை தன்மையையும் விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதற்கிடையே, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கலையரசன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
நேற்று நடந்த இதன் மீதான விசாரணையில், 'அனைவரும் பணிக்கு திரும்பி விட்டனர்' என, அரசு தரப்பு அளித்த பதிலை பதிவு செய்து, மார்ச் 7க்கு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

