/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீரில் புழு; சுகாதார கேட்டில் வாறுகால்
/
குடிநீரில் புழு; சுகாதார கேட்டில் வாறுகால்
ADDED : ஆக 23, 2024 03:22 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே வடக்குநத்தம் கிராமத்தில் ஊராட்சி வழங்கும் குடிநீரில் புழுக்கள் வருவதாகவும், தெருக்களில் உள்ள வாறுகால்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடாக இருப்பதாகவும் மக்கள் புலம்புகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது வடக்குநத்தம் ஊராட்சி. இதில் வடக்குநத்தம், தெற்கு நத்தம் கிராமங்கள் உள்ளடக்கி உள்ளது. வடக்குநத்தத்தில் 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் சுகாதார கேடாக உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மேல்நிலைத் தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் இடியும் நிலை உள்ளது.
ஊராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. ஆனால் இந்த மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொட்டியில் பாசம் பிடித்து அழுக்குகள் சேர்ந்து புழுக்களுடன் தண்ணீர் வருகிறது. மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது.
தெருக்களில் முறையான வாறுகால்கள் இல்லை. ரோடுகளும் இல்லை. மழைக்காலத்தில் சேரும் சகதியுமாக உள்ளது. ஊருணிக்கு அருகில் உள்ள குளியல் தொட்டியின் ஒரு பகுதி இடிந்து விட்டது. இதனால் குளிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி மூலம் கட்டப்பட்ட புது கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. நூலகத்திற்கும் மின் இணைப்பு இல்லை. ஊருணியின் மறுபக்கம் ஊராட்சி பள்ளி உள்ளது.
இதன் வழியாகத்தான் மாணவர்கள் செல்ல வேண்டி உள்ளது. ஊரணியின் கரை பகுதியில் ஒரு பாலம் அமைத்தால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்ல வசதியாக இருக்கும். ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் சுவையாக இல்லை. ஊரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் வழங்க வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு என நவீன சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும்.