/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்புகளால் சுருங்கும் வீரசோழனில் கண்மாய்
/
ஆக்கிரமிப்புகளால் சுருங்கும் வீரசோழனில் கண்மாய்
ADDED : மார் 27, 2025 05:59 AM

நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் கண்மாய் ஆக்கிரமிப்பால் நீர் பிடிப்பு சுருங்கி ஆக்கிரமிப்பை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி வீரசோழனில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இக்கண்மாய் கரையை ஒட்டி அபிராமம், நல்லுக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரோடு உள்ளது.
ரோட்டை ஒட்டி ஏராளமான கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைக்காரர்கள் கண்மாய் கரையை ஆக்கிரமித்து, சிலாப், தொட்டி, இரும்பு சாமான்கள், கழிவு பொருட்களை போட்டு வைத்துள்ளனர். பொருட்கள் பாதுகாப்பாக இருக்க கரையை சேதப்படுத்துகின்றனர். மினி வேன் வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களை கரை மேல் நிறுத்தி வருகின்றனர்.
கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் கண்மாய் அசுத்தமாக கிடக்கிறது. அப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தண்ணீர் மாசு விடும் அபாயம் உள்ளது. கரை உடைப்பால் அதிக அளவில் தண்ணீரை சேமிக்க முடியாமல் போகிறது. அத்துடன் கண்மாய் கரையில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது.
அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதமான கரையை சீரமைத்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.