ADDED : நவ 04, 2024 05:15 AM
சத்திரப்பட்டி : ராஜபாளையம் அருகே நுாலகத்திற்காக ஒதுக்கப்பட்ட கட்டடம் பராமரிப்பிற்கு வழியின்றி ரேஷன் கடையாக மாறிவிட்டதை அதே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கீழ ராஜகுலராமன் ஊராட்சிக்குட்பட்ட வி. புதுாரில் கீழ ராஜகுல ராமன் கண்மாய் ஒட்டி நுாலக கட்டடம் அமைக்கப்பட்டது. பராமரிப்புக்கு முறையாக ஆட்கள் நியமிக்காததால் சரிவர திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் வி.புதுார் கிராமத்தினருக்கு ரேஷன் கடை சொந்த கட்டடம் இல்லாத நிலையில் நுாலகத்தையே ரேஷன் கடையாக மாற்றி வைத்துள்ளனர்.
கட்டிடம் பராமரிப்பின்றி இருந்ததை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட மூலம் பராமரிப்பு செய்து வைத்துள்ள நிலையில் இப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள், முதியோர், பெண்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக நுாலகத்தை மீண்டும் முறைப்படுத்த வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி வேல்முருகன்: அரசு புதிதாக பல கோடி செலவில் புதிய நுாலகங்கள்கட்ட பணம் ஒதுக்குவதை தவிர்த்து ஏற்கனவே இது போல் உள்ள நுாலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராக முடியும் என்பதே எதிர்பார்ப்பு.