/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் 30 ஆண்டுகள் கடந்தும் செயல்படாத புது பஸ் ஸ்டாண்ட்
/
விருதுநகரில் 30 ஆண்டுகள் கடந்தும் செயல்படாத புது பஸ் ஸ்டாண்ட்
விருதுநகரில் 30 ஆண்டுகள் கடந்தும் செயல்படாத புது பஸ் ஸ்டாண்ட்
விருதுநகரில் 30 ஆண்டுகள் கடந்தும் செயல்படாத புது பஸ் ஸ்டாண்ட்
ADDED : மார் 02, 2024 04:21 AM

விருதுநகர் : விருதுநகரில் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகளை கடந்தும் செயல்படாத புது பஸ் ஸ்டாண்டால் பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கலெக்டர் அலுவலகம் பஸ் ஸ்டாப் செல்வதற்கு மிகுந்த சீரமத்தை சந்திப்பது தொடர்கதையாக உள்ளது.
விருதுநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி மக்கள் சிரமமில்லாமல் பயணிப்பதற்காக 1992ல் புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது.
இதற்கு முன்னாள் முதல்வர் காமராஜ் பெயர் வைக்கப்பட்டது. திறந்த 3 மாதங்களிலேயே உள்ளூர் ஓட்டு அரசியல் காரணமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டு காட்சி பொருளாக மாற துவங்கியது.
32 ஆண்டுகளை கடந்தும் தற்போதை வரை செயல்படாத நிலையிலேயே உள்ளது. இந்த கட்டடங்கள் சிதிலமடைந்ததால் நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்புக்காக என நிதி ஒதுக்கி புனரமைப்பு செய்து வருகிறது.
இந்த புது பஸ்டாண்ட் ஒவ்வொரு முறை செயல்பாட்டிற்கு வரும் என பல கருத்து கேட்பு கூட்டங்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தும் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் இன்று வரை புது பஸ் ஸ்டாண்ட் செயல்படாமலே உள்ளது.
2023 ஜூலை 29ல் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்வதாக செய்திகள் வெளியான நிலையில் வழக்கம் போல தண்ணீரில் எழுதிய எழுத்து போல காணமால் போனது.
2021 சட்டசபை தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக மெயின் பஜார் வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும், புது பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்தப்படும் எனக்கூறி வாக்குகள் கேட்டனர்.
தேர்தலில் வென்றவுடன் கூறியபடியே மெயின் பஜாரில் செல்லும் பஸ் நிறுத்தப்பட்டது.
ஆனால் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.
மற்ற மாவட்டங்களில் உள்ள புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு, தனியார் விரைவு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இது போன்று இயக்கப்படும் பஸ்கள் அங்குள்ள புது பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே சென்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றன.
நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை, கோவை, ஈரோடு, கரூர், சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நான்கு வழிச்சாலை அருகே அமைந்துள்ள புது பஸ்டாண்டிற்கு வந்து செல்வதில்லை.
இதனால் விருதுநகருக்கு இரவு, அதிகாலை நேரங்களில் பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நகருக்குள் வருவதற்கு சரியான போக்குவரத்து இல்லாமல் அல்லல்பட வேண்டியுள்ளது.
தமிழக முதல்வர் தனிப்பிரிவு, அமைச்சர்கள், கலெக்டர், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள், நகராட்சி, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் என பலருக்கும் மனுக்களை அனுப்பி மக்களும்ஓய்ந்து விட்டனர்.
நடராஜன், நெய் வியாபாரம்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்தால் மட்டுமே நகரின் தொழில் வளம் அதிகரித்து மக்களும் பயணம் செய்வதற்காக தடையில்லா போக்குவரத்து பெற முடியும்.
32 ஆண்டுகள் கனவாக இருக்கும் புது பஸ் ஸ்டாண்டை மக்களின் நலன் கருதி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேச்சியம்மாள், குடும்பத்தலைவி: பிற மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்ட்களை போல விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டும் செயல்பாட்டிற்கு வந்தால் மட்டுமே இரவு நேரத்தில் பணி முடித்து வரும் பெண்கள் விருதுநகருக்குள் வருவதற்கு எதுவாக இருக்கும்.
எனவே நான்கு வழிச்சாலை அருகேயே அமைந்தும் செயல்பாட்டிற்கு வராத புது பஸ் ஸ்டாண்டிற்கு பிற மாவட்டங்களில் விருதுநகர் வழியாக செல்லும் அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

