வத்திராயிருப்பில் வெடிகுண்டுகள் பறிமுதல்: மூன்று பேர் கைது
வத்திராயிருப்பில் வெடிகுண்டுகள் பறிமுதல்: மூன்று பேர் கைது
ADDED : செப் 23, 2026 11:59 PM

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் டூவீலரில் கொண்டுவரப்பட்ட 18 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
நேற்று மாலை 6:00 மணிக்கு வத்திராயிருப்பு எஸ்.ஐ. பிரகாஷ் தலைமையிலான போலீஸ் குழுவினர் மகாராஜபுரம் ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது மகாராஜபுரத்தில் இருந்து ஒரு டூவீலரில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்தவுடன் டூவீலரை திருப்பி தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து, டூவீலரை சோதனை செய்ததில் அதில் 18 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. விசாரணையில் அவர்கள் வத்திராயிருப்பு புதுாரைச் சேர்ந்த கவிராஜன் 19 மற்றும் 17 வயது மாணவர்கள் இருவர் என்பதும், அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டு செல்வதும் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
வெடிகுண்டு நகரமாகும் ஸ்ரீவில்லிபுத்துார் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்துாரில் துலுக்கன்குளம் கண்மாயில் நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளால் கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. பல மாதங்களாக வெடிகுண்டுகளை பிடித்தாலும் அதை தயார் செய்பவர்களை இது வரை கைது செய்யவில்லை. எனவே வெடிகுண்டு தயாரிப்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்க வேண்டும்.
