ADDED : டிச 23, 2024 04:35 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே அழகாபுரியில் உள்ள ஊருணி தண்ணீர் பழுப்பு நிறமாக மாறியுள்ளது. இதனால் ஊருணிக்குள் இறங்குவதற்கே மக்கள் அஞ்சுகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியின் மையப்பகுதியில் ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் பராமரிப்பு பணிகள் செய்து பல ஆண்டுகளாகிறது. இதனால் மழைக்காலத்தில் தேங்கும் நீரை முறையாக தேக்கி வைக்க முடியாத நிலை தொடர்கிறது. மேலும் மழையின் போது தேங்கும் தண்ணீரில் அடிக்கடி பாசி படர்ந்து பச்சை நிறத்தில் காணப்படும்.
ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஊருணியில் தண்ணீர் நிறைந்துள்ளது. ஆனால் கழிவுகள் கலக்கப்படுவதால் தண்ணீரின் நிறம் பழுப்பு நிறமாக மாறியுள்ளது. இதை பார்ப்பதற்கு இரும்பில் துருப்பிடித்த நிறத்தில் ஊருணி தண்ணீர் முழுவதும் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊருணியை சுற்றி இருப்பவர்கள் கழிவுகளை கலப்பதால் நிறம் மாற்றம் ஏற்பட்டாலும் பழுப்பு நிறத்தில் இருப்பதால் தண்ணீர் அருகே செல்வதற்கே மக்கள் அஞ்சுகின்றனர். எனவே இதை சரி செய்ய வேண்டும்.

