/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தட்கல் டிக்கெட் வாங்க பைவைத்து இடம் பிடிப்பு
/
தட்கல் டிக்கெட் வாங்க பைவைத்து இடம் பிடிப்பு
ADDED : ஜன 30, 2024 07:11 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் தட்கலில் டிக்கெட் பெற பல மணி நேரத்திற்கு முன்பே இருக்கையில் கற்கள் ,பைகளை வைத்து புரோக்கர்கள் இடம் பிடிக்கின்றனர். இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை வழியாக சென்னை செல்ல, செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் ரயில் வந்து செல்கிறது. இதில் தினமும் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை செல்கின்றனர்.
பஸ் கட்டண உயர்வு, தற்போது சென்னை செல்வதற்கு சென்னைக்கு முன்பே கிளாம்பாக்கத்தில் பஸ் ஸ்டாண்ட் இருப்பதால் பஸ்ஸில் சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர். அங்கிருந்து சென்னை செல்ல 2 மணி நேரம் ஆகிறது. அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை செல்ல டிக்கெட் 320 ரூபாய் மட்டும் தான். இதனால் மக்கள் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர்.
இதனால் ரயிலின் முன்பதிவு 2 மாதங்களுக்கு முன்பே முடிந்து விடுகிறது. ஒரு நாட்களுக்கு முன்பு தான் தட்கல் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் முதல் நாள் காலை 9:30 மணியிலிருந்து வழங்கப்படுகிறது. 10:00 மணி முதல் 11:00 மணி வரை டிக்கெட் வழங்கப்படுகிறது.
இதனால் விண்ணப்பத்தை பெறுவதற்கு மக்கள் முதல் நாள் இரவே 12 மணி நேரத்திற்கு முன்பே விடிய விடிய ரயில் நிலையத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
மேலும் பல புரோக்கர்கள் இருக்கைகளில் துணிகள், பைகள் வைத்து இடம் பிடிக்கின்றனர். இதனால் விண்ணப்பம் வாங்க வருபவர்களுக்கும் இடம் பிடித்து காத்திருப்பவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டிய ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
ரயில்வே வாகன காப்பகத்தில் வேலை செய்பவர்களும் தங்கள் பங்கிற்கு இடம் பிடித்து பாரம் வாங்கி வெளியில் விற்கின்றனர். இதைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் புரோக்கர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, பயணிகளுக்கு சிரமமின்றி தக்கல் டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.