/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடைபட்டு ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்கள்
/
அடைபட்டு ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்கள்
ADDED : ஜன 01, 2026 05:56 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: நீர்வரத்து கால்வாய்கள் அடைப்பு, ஆக்கிரமிப்பு, மண்மேவி காணப்படும் நீர் பிடிப்பு பகுதி, பழுதடைந்த கலிங்கல், நீர் வரத்து இல்லாமல் ஆண்டுக்காண்டு குறையும் பாசனம் என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் தட்டான் குளம் கண்மாய் விவசாயிகள்.
ஸ்ரீவில்லிபுத்துாரின் வடமேற்கு பகுதியான திருவண்ணாமலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாப்பான்குளம், உய்யங்குளம், வெங்கடாசலபேரி, வெள்ளமடம், தட்டாங்குளம், புதுக்குளம் கண்மாய்கள் உள்ளது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்து தட்டான்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் அடைபட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் காணப்படுகிறது.
பல ஆண்டுகளாக குடிமராமத்து பணி செய்யாமல் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகள் முழுவதும் மண் மேவி காணப்படுகிறது. கலிங்கல் சேதமடைந்துள்ளது. நீர்வரத்து கால்வாய்களில் செடி கொடிகள் வளர்ந்து பாதைகள் அடைப்பட்டுள்ளது. 1987 க்கு முன்பு வரை இந்த கண்மாயை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் வரை விவசாயம் செய்து வந்தனர்.
ஆனால், அதற்குப் பின்பு ஆண்டுக்காண்டு நீர் வரத்து குறைந்து போதிய தண்ணீர் வரத்து ஏற்படாமல் விவசாயம் செய்ய முடியாமல் தற்போது கண்மாயின் பாசன நிலங்கள் விளைநிலங்களாக மாறி வருகிறது. இந்த கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்தால் புதுக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும். பின்னர் அங்கிருந்து வடமலைகுறிச்சி கண்மாய்க்கும் தண்ணீர் வரத்து ஏற்படும்.இதனால் நகரின் வடக்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
ஆனால் தற்போது நீர்வரத்து கால்வாய்கள் அடைபட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் இருப்பதால் பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து ஏற்படாமல் கண்மாய் வறண்டு, விவசாயிகள் படிப்படியாக விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். எனவே, நீர்வரத்து பாதைகளை தூர்வாரியும், குடிமராமத்து பணிகள் செய்தும், கரைகளை பலப்படுத்தியும், மீண்டும் தண்ணீர் வரும் நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிமராமத்து செய்ய வேண்டும் -வன்னியராஜ், விவசாயி: பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கண்மாய் தண்ணீரை நம்பி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை உட்பட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். ஆனால் நீர்வரத்து பாதைகள் அடைபட்டதால் தண்ணீர் வரத்து ஏற்படாத நிலை உருவாகி விவசாயம் குறைந்து வருகிறது. எனவே, குடி மராமத்து பணி செய்து கண்மாய்க்கு தண்ணீர் வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அடைப்பு, ஆக்கிரமிப்பு மாரிச்சாமி, இயற்கை ஆர்வலர்: தட்டான்குளம் கண்மாய்க்கு 2 பாதைகள் வழியாக தண்ணீர் வரும். தற்போது இப்பாதைகள் அடைபட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. நீர்வரத்து பாதை மேடாகி வண்டி பாதையாக மாறிவிட்டது. அதனால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்படுவது குறைந்து வருகிறது. இதனால் பாசன நிலப்பரப்பு குறைகிறது. எனவே, நீர்வரத்து பாதையில் உள்ள அடைப்புகளையும் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.
விவசாயம் குறையும் - கோவிந்தராஜ், விவசாயி: நகரின் தென்மேற்கில் செண்பகத் தோப்பு, மம்சாபுரம் பகுதியில் பெய்யும் அளவிற்கு திருவண்ணாமலை பகுதியில் போதிய அளவிற்கு மழை பெய்வது இல்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலை பகுதியில் உள்ள பல்வேறு கன்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்படாமல் விவசாயம் குறைந்து வருகிறது. இப்பகுதி கண்மாய்கள் நிரம்பினால் மட்டுமே வடமலைகுறிச்சி கண்மாய்க்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு நகரின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும், விவசாயத்திற்கும் போதிய அளவில் தண்ணீர் கிடைக்கும்.

