/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு அலுவலகமாக மாறிய சமுதாயக்கூடம்
/
அரசு அலுவலகமாக மாறிய சமுதாயக்கூடம்
ADDED : ஆக 15, 2025 02:21 AM

விருதுநகர்: விருதுநகர் எப்.எப்., ரோட்டில் உள்ள சமுதாய கூடம் அரசு அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியினர் சுப நிகழ்ச்சிகள் நடத்த வழியின்றி திணறுகின்றனர்.
விருதுநகர் எப்.எப்., ரோட்டில் சமுதாய கூடம் உள்ளது. இப்பகுதி மக்கள் அவ்வப்போது இந்த கூடத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக பல்வேறு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. அதில் காசநோய் பிரிவுக்கான கட்டடமும் ஒன்று. இதையடுத்து தற்காலிகம் என்று கூறி சமுதாய கூடத்திற்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டது. 4 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் தற்போது வரை சமுதாய கூடத்தில் இருந்து காசநோய் அலுவலகம் இடமாற்றப்படவில்லை. இதனால் 3 ஆண்டுகளாக சமுதாய கூட பயன்பாடும் இல்லை.
மருத்துவ சேவை இயக்குனரகத்தின் கீழ் தான் காசநோய், அரசு மருத்துவமனை, எய்ட்ஸ் அலுவலகங்கள் வருகின்றன. தற்போது கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லுாரி மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் வருகிறது. இதனால் கட்டப்பட்ட புதிய மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டடத்தில் இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. நோயாளிகள் வந்து சென்று பழகிவிட்டனர்.
இருப்பினும் சமுதாய கூடம் எந்த பயன்பாட்டிற்கு கட்டப்பட்டதோ அதற்கு பயன்படாமல் முடங்கி உள்ளது. எனவே காசநோய் பிரிவுக்கென சிறப்பு கட்டடம் கட்ட வேண்டும். சமுதாய கூடத்தை மீண்டும் ஏழை மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.