/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஆக 01, 2025 01:57 AM
விருதுநகர்:விருதுநகர் நகராட்சியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என கூட்டத்தில் இருந்து நகராட்சிக் கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். மேலும் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
விருதுநகர் நகராட்சியில் சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். கமிஷனர் சுகந்தி, துணைத் தலைவர் தனலட்சுமி, பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் மதியழகன், தி.மு.க.,: இக்கூட்டத்தில் தலைவரால் 2 பொருள் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை வசதிக்காக பல டெண்டர் விடப்பட்டும் அது பற்றிய விபரங்களை மன் றத்தின் கவனத்திற்கு ஏன் கொண்டு வரவில்லை.
கலையரசன், தி.மு.க.,: குடிநீர் வடிகால் வாரியத்தினர் 3அல்லது 4 வீடுகள் மட்டுமே உள்ள பகுதிகளில் எவ்வாறு பிரதான குழாய்களை பதிக்கின்றனர். வீடுகள் நெருக்கமாக குடிநீர் பிரச்சனை அதிகமுள்ள பகுதிகளில் குழாய் பதிக்க ஏன் மறுக்கின்றனர்.
செல்வரத்னா, காங்.: குழாய் உடைப்புகளை சீர் செய்ய போதிய ஆட்கள் இல்லை. பாதாள சாக்கடை மோட்டார்களை இயக்க ஆட்கள் இல்லை. எனவே, கூடுதலாக ஆட்களை நியமிக்க வேண்டுமென கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், தற்போது வரை பணிகள் நடக்கவில்லை.
வெங்கடேஷ், அ.தி.மு.க.,: ஒரு மாதமாக தனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. பலமுறை கூறியும் அடைப்புகளை நீக்க மறுப்பது ஏன்.
ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்: சாதாரண ஏழை மக்களின் வீடுகளுக்கு பழைய சொத்து வரியை அளவுக்கு அதிகமாக விதித்துள்ளீர்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் ஆட்சேபனை மனுக்களை கமிஷனரிடம் நேரடியாக வழங்கினர். 6 மாதங்கள் ஆகியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
மற்ற கவுன்சிலர்களும் கமிஷனர், தலைவரை சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர். அப்போது உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைத்ததாக கமிஷனர் கூறினார். இதனால் திருப்தியடையாத கவுன்சிலர்கள் அனைவரும் கூட்ட அறையை விட்டு வெளியேறினர். எனவே விருதுநகர் நகராட்சியில் ஒரு தீர்மானம் கூட நிறைவேறவில்லை.