/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆன்லைன் மூலம் பட்டாசு விற்றால் கிரிமினல் வழக்கு
/
ஆன்லைன் மூலம் பட்டாசு விற்றால் கிரிமினல் வழக்கு
ADDED : ஜூலை 30, 2025 01:11 AM
சிவகாசி; சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் பட்டாசு ஆர்டர் பெறுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன், பொதுச் செயலாளர் இளங்கோவன், ஆன்லைன் பட்டாசு விற்பனை எதிர்ப்பு கமிட்டி தலைவர் பிரபாகரன் ஆகியோர் கூறியதாவது:
வெடிபொருள் சட்டப்படி பட்டாசு கடைக்கான உரிமம் 5 ஆண்டுகளுக்கு வழங்க அதிகாரம் உள்ளது. நிரந்தர பட்டாசு கடை உரிமத்தை புதுப்பிக்க பிப்., மார்ச் மாதங்களில் விண்ணப்பித்து வருகிறோம். விண்ணப்பித்த காலத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து புதுப்பித்து வழங்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையின் போது சில்லறை பட்டாசு வணிகம் செய்ய உரிமம் பண்டிகைக்கு 90 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு 30 நாட்களுக்கு முன்னதாக 15 நாட்கள் சில்லறை பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வழங்க வேண்டும்.
தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்று ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத் தக்க வகையில் வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் ஆன்லைன் மூலம் பட்டாசு ஆர்டர் பெறுவதற்கும், விற்பனைக்கும் தடை விதித்து உள்ளது. எனவே ஆன்லைன் பட்டாசு விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதனை மீறி ஆன்லைன் மூலம் பட்டாசு ஆர்டர் பெறுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ,கிரிமினல் வழக்கு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த தீபாவளியின் போது ஆன்லைன் வர்த்தகத்தால் 40 சதவீதம் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் ரூ.ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
சீன பட்டாசுகளில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வோர் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறினர்.