/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத குடிநீர் தொட்டி, வாரச்சந்தையால் நெருக்கடி
/
செயல்படாத குடிநீர் தொட்டி, வாரச்சந்தையால் நெருக்கடி
செயல்படாத குடிநீர் தொட்டி, வாரச்சந்தையால் நெருக்கடி
செயல்படாத குடிநீர் தொட்டி, வாரச்சந்தையால் நெருக்கடி
ADDED : பிப் 16, 2025 05:30 AM

காரியாபட்டி : குடிநீர் தொட்டி கட்டப்பட்டு 6 மாதம் ஆகியும் பயன்பாட்டிற்கு வராதது, சிமென்ட் ரோடு போடப்பட்ட வீதிகள் சேதமடைந்து கிடப்பதால், வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை, வாரச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் ரோட்டோரத்தை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவது உள்ளிட்ட காரணங்களால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் மேல் நிலைத் தொட்டி கட்டப்பட்டது. 6 மாதமாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு வீதிகளில் சிமென்ட் ரோடு போடப்பட்டது. அம்ருத் திட்டத்தில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களால் வீதி சேதமடைந்து கிடக்கிறது. டூவீலர்களில் செல்ல முடியவில்லை. ஆட்கள் நடந்து சென்றால் இடறி விழ நேரிடுகிறது. விருதுநகர் கல்குறிச்சி ரோட்டில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காய்கறிகள், வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். விபத்து அச்சம் உள்ளது. புறவழிச் சாலை ஏற்படுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளமான வீதிகள்
பிச்சைகனிராஜா, தனியார் ஊழியர்: அம்ருத் திட்டத்தில் குழாய் பதிக்க வீதிகளில் பள்ளம் ஏற்படுத்தினர். பெரும்பாலான வீதிகள் சிமென்ட் போடப்பட்டிருந்தது. சேதமடைந்தவற்றை சரிவர சீரமைக்காமல் விட்டனர். டூவீலரில் செல்ல முடியவில்லை. ஆட்கள் நடந்து சென்றால் இடறி விழ வேண்டி இருக்கிறது. இரவு நேரங்களில் தட்டு தடுமாறி செல்ல வேண்டி இருப்பதால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எப்போ திறப்பீங்க
உலகநாதன், தனியார் ஊழியர்: 5வது வார்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ. பல லட்சம் செலவில் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. 6 மாதம் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. குடிநீர் பிடிக்க வேறு பகுதிக்கு செல்ல வேண்டி இருப்பதால் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. மேல்நிலைத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்று இடத்தில் சந்தை
ஆற்றல் அரசு, தனியார் ஊழியர்: தனியார் நிறுவனம் சார்பாக விருதுநகர் கல்குறிச்சி ரோட்டில் வாரச்சந்தை நடத்தி வருகின்றனர். போதிய இட வசதி இல்லாததால் காய்கறிகளை ரோட்டோரத்தில் போட்டு விற்பனை செய்கின்றனர். வாகனங்களை ரோட்டிலே நிறுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இடங்கள் ஏராளமாக உள்ளன. மாற்று ஏற்பாடாக பேரூராட்சி சார்பாக அங்கு வாரச்சந்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.