ADDED : நவ 13, 2024 06:45 AM

சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரத்தில் சேதம் அடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தினால் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது.
இங்கு 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில் கட்டடம் சேதம் அடைந்ததால் தற்போது வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது.
தற்போது சேதம் அடைந்த கட்டடம் பயன்பாட்டில் இல்லை. அதே நேரம் கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் விபரீதம் அறியாமல் சேதமடைந்த அங்கன்வாடி மையம் அருகே விளையாடுகின்றனர். தவிர இக்கட்டடத்தை கடந்து தான் பள்ளிக்கும் செல்ல வேண்டும்.
மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் சேதம் அடைந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது.
எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.