/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த மயானங்கள்; சுகாதார வளாகமின்றி சிரமம்
/
சேதமடைந்த மயானங்கள்; சுகாதார வளாகமின்றி சிரமம்
ADDED : மார் 19, 2024 05:39 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சியில் சேதமடைந்து காணப்படும் மயானங்கள், மூடி கிடக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், மின்விளக்கு, பஸ் வசதி, சுகாதார வளாகமின்றி சிரமம் உட்பட பல்வேறு சிரமங்களுடன் வசித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த ஊராட்சியில் பாட்டக்குளம், சல்லிபட்டி, சொக்கலாம்பட்டி, சமத்துவபுரம், செம்பட்டையன்கால், மாயிருளம்பட்டி, கொந்தராயன்குளம், தும்பையாபுரம், கள்ளிப்புதூர், வைகுண்டதேவன்பட்டி, செம்மணாண்டி கரிசல்குளம் என 12 சேய் கிராமங்கள் உள்ளது.
முழுக்க, முழுக்க விவசாயம் மற்றும் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எளிதாக வந்து செல்கின்றனர். ஆனால், அங்கிருந்து எம். புதுப்பட்டி வழியாக சிவகாசி செல்ல பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
கிருஷ்ணன்கோவிலில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு சேய் கிராமங்களுக்கு செல்லும் ரோட்டில் இரு புறமும் மின்கம்பங்கள் இருந்தும், மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
சொக்கலம்பட்டியில் உள்ள மயானங்கள் சேதமடைந்து தண்ணீர் வசதியின்றி, செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மாயிருளம்பட்டியில் நான்கு வழி சாலை பணிகள் நடப்பதால் இரவு நேரங்களில் ரோட்டை கடப்பதில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதேபோல் அனைத்து சேய் கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இத்தகைய குறைகளை அரசு நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

