ADDED : ஜன 30, 2024 07:12 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் தேங்கியுள்ள மணல் குவியல்களாலும், குண்டும், குழியுமான ரோட்டாலும் கனரக வாகனங்களாலும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்திரா நகரில் இருந்து பஸ் டிப்போ, ராமகிருஷ்ணாபுரம், பெரிய மாரியம்மன் கோவில், சர்ச் சந்திப்பு, கீழ ரத வீதி, திருப்பாற்கடல் வளைவு, ஆண்டாள் தியேட்டர் சந்திப்பு, வைத்தியநாத சுவாமி கோயில் பின்புறம் வழியாக வன்னியம்பட்டி விலக்கு வரை ரோட்டின் இருபுறமும் மணல் குவியல் அதிகளவில் உள்ளது.
இதேபோல் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ராஜபாளையம் வரையுள்ள ரோட்டில் ஏராளமான இடங்களில் குண்டும், குழியுமாக ரோடுகள் சிதைந்தும் காணப்படுகிறது. இதனால் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இதே போல் ரோட்டின் இருபுறமும் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படும் நிலையில் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வந்தால் நடந்து , டூவீலர்களில் செல்பவர்களும், பள்ளி மாணவர்களும் விபத்திற்கு ஆளாகும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் இருபுறமும் குவிந்துள்ள மணல் குயில்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், குண்டும் குழியுமாக உள்ள ரோட்டினை சீரமைக்கவும், தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் தேசிய நெடுஞ்சாலை துறையும், போக்குவரத்துக் காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.