/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சுகாதார வளாகம், சமுதாயக்கூடம்
/
செயல்படாத சுகாதார வளாகம், சமுதாயக்கூடம்
ADDED : பிப் 13, 2024 05:13 AM

சிவகாசி, ; செயல்படாத சுகாதார வளாகம், சமுதாயக்கூடம் சேதமடைந்த கதிரடிக்கும் களம் என புதுக்கோட்டை ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஆதிதிராவிடர் காலனி, பர்மா காலனியை உள்ளடக்கிய புதுக்கோட்டை ஊராட்சியில் எண்ணற்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆதி திராவிடர் காலனியில் மயானத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. புதுக்கோட்டையில் ஊருணியில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
இங்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் சேதமடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டுவதால் இதன் கழிவுகளால் தொற்று நோய் ஏற்படுகின்றது.
சுகாதார வளாகம் செயல்படாததால் மக்கள் திறந்தவெளியினை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது.
ராமமூர்த்தி, விவசாயி: இப்பகுதியில் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்கின்றோம் பயிர்களை காய வைக்க, பிரித்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் களம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி விடுவதால் பயிர்களை காய வைக்க முடியவில்லை. எனவே உடனடியாக களத்தினை சீரமைக்க வேண்டும்.
காளீஸ்வரி, ஊராட்சி தலைவர்: மக்களின் பயன்பாட்டிற்காக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக ஊராட்சி அலுவலகம், துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. தெருக்களில் வாறுகால், பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.