/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலங்கள் கட்ட வனத்துறை அனுமதி வழங்குவதில் தாமதம்
/
பாலங்கள் கட்ட வனத்துறை அனுமதி வழங்குவதில் தாமதம்
ADDED : ஜன 05, 2024 05:39 AM
வத்திராயிருப்ப : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பாதையில் உள்ள நீர் வரத்து ஓடைகளில் பாலங்கள் கட்ட வனத்துறை அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நிதி இருந்தும், பணிகள் செய்ய முடியாமல் கோயில் நிர்வாகம் தவித்து வருகிறது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஏராளமான வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர். 2015ல் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தொடர்ந்து அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் வழியில் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை 7 இடங்களில் நீர்வரத்து ஓடைகள் உள்ளது. இங்கு நீர்வரத்து ஏற்பட்டால் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் நிலை பல வருடங்களாக நீடித்து வருகிறது.
ரூ.9 கோடி செலவில் 7 இடங்களில் பாலங்கள் அமைக்கவும், 5 இடங்களில் கைப்பிடிகள் அமைக்கவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டு அதற்காக டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. ஆனால்,வனத்துறை அனுமதி கொடுப்பதில் பல மாதங்களாக காலதாமதம் செய்து வருகிறது.
இப்பிரச்னை தொடர்பாக சென்னையில் அறநிலையத்துறை , வனத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட கூட்டம் நடத்தப்பட்டும் எந்த வித இறுதி முடிவு எடுக்காமலும், வனத்துறை அனுமதி கொடுக்கப்படாமலும் இருப்பதால் இன்று வரை பணிகள் நடைபெறவில்லை.
எனவே, வனத்துறை நிர்வாகம் காலதாமதம் இன்றி அனுமதி அளிக்க வேண்டுமென கோயில் நிர்வாகமும், சதுரகிரி பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.