/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் மந்தகதியில் வளர்ச்சி பணிகள்
/
அருப்புக்கோட்டையில் மந்தகதியில் வளர்ச்சி பணிகள்
ADDED : மார் 21, 2025 05:59 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நகராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கியும் ஒப்பந்தகாரர்களால் மந்தகதியில் நடக்கும் பணிகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் தேவையான வளர்ச்சி பணிகள், கோடிக்கணக்கான நிதியில் செய்யப்படுகின்றன. தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், சிறு பாலங்கள் அமைத்தல், சமுதாய கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன. இது போன்ற பணிகளை செய்ய நகராட்சியில் பதிவு பெற்ற 10 க்கும் மேற்பட்ட ஒப்பந்தகாரர்கள் உள்ளனர். அனைவரும் பணிகள் செய்த நிலையில், 3 ஆண்டுகளாக செய்யப்படும் பணிகளுக்கு பில் பாஸ் செய்வதில் தாமதம், அதிக கவனிப்பு, குறிப்பிட்ட சில ஒப்பந்தகாரர்களுக்கே பணிகள் வழங்கிய நிலையில் பல ஒப்பந்தகாரர்கள் நகராட்சியில் பணி எடுப்பதை விட்டுவிட்டனர். 2, 3 ஒப்பந்தகாரர்கள் தான் பணிகளை செய்கின்றனர்.
தரமற்ற பணிகள்
இதனால், பல பகுதிகளில் தரமற்ற பணிகள் நடக்கிறது. நகராட்சி 16 வது வார்டில் மலையரசன் கோவில் தென் வடல் தெருவில் 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வாறுகால் பாலம் 7 மாதங்களுக்குள் பெயர்ந்து விட்டது.
இதுகுறித்து கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் 4 நாட்களுக்கு முன் நடந்த நகராட்சி கூட்டத்தில் புகார் செய்தார். தரமற்ற பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களை மாற்றுங்கள் எனவும் வலியுறுத்தி கூறினார். ஆனால் நகராட்சியில் பணிகளை எடுத்துச் செய்ய ஒப்பந்ததாரர்கள் வருவது இல்லை என துணை தலைவர் பழனிச்சாமி பதில் கூறினார்.
ஒப்பந்தக்காரர்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் இழுத்துக் கொண்டே செல்கிறது. இதேபோன்று சொக்கலிங்கபுரம் நகராட்சி மயானம் அருகில் காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி மந்தகதியில் நடக்கிறது. பூக்கடை பஜார் பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட அந்தப் பகுதி முழுவதும் வெள்ள காடாக மாறி விடுகின்றது.
மொத்தத்தில் அதிகாரிகள் வளர்ச்சி பணிகள் எதையும் ஆய்வு செய்வதுமில்லை. அதிகாரிகள் சொல்வதை ஒப்பந்ததாரர்கள் கேட்பதும் இல்லை. மாவட்ட நிர்வாகம் தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.