ADDED : ஜூலை 03, 2025 03:08 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்த சாக்கடை மூடி மாற்றப்பட்டு புதிய மூடி அமைக்கப்பட்டது.
சிவகாசி பழைய விருதுநகர் ரோடு, பசும்பொன் ரோடு விலக்கில் கழிவுநீர் மழை நீர் வெளியேறி செல்வதற்கு ஏதுவாக வாறுகால் ரோட்டின் அடியில் செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால் சரி செய்வதற்காக அமைக்கப்பட்ட திறந்தவெளியை மூடுவதற்காக இரும்பு குழாயினால் ஆன மூடி அமைக்கப்பட்டிருந்தது.
இப்பகுதியில் அச்சகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளதால் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் இரும்பு குழாய் மூடி மீது ஏறிச் செல்வதால் சேதமடைந்து இரும்பு குழாய் வெளியே நீட்டி கொண்டிருந்தது. மூன்று ரோடு பிரியும் இடத்தில் இவ்வாறு இருப்பதால் டூவீலர் சைக்கிள் நடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கினர்.
இதனை அகற்றிவிட்டு தரமான மூடி அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த பழைய இரும்பு மூடி அகற்றப்பட்டு புதிய மூடி அமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.