/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்
/
நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்
ADDED : பிப் 14, 2024 05:57 AM
சிவகாசி : விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விற்பனை குழுவினர் தேங்காய் கொள்முதலை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
அழகர்சாமி, விவசாயி: திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாய் நிறைந்து தண்ணீர் செங்கமலப்பட்டி கண்மாய்க்கு செல்லும். ஆனால் பாலம் இல்லாததால் தண்ணீர் வீணாகிறது . அதிகாரிகள் ஆய்வு செய்து பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமச்சந்திர ராஜா, விவசாயி: மக்காச்சோளம் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை சோதனை மேற்கொண்டு பயிர் இழப்பீடு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ., விஸ்வநாதன்: பயிர் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்மையப்பன்: நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும். ராஜபாளையம் கொத்தங்குளத்தில் சிமெண்ட் களம் இல்லாததால் விவசாயிகள் பயிர்களை காய வைக்கவும் தரம் பிரிக்கவும் சிரமப்படுகின்றனர்.
விஜயராஜன், விவசாயிகள் சங்கத் தலைவர்: தேங்காய் கொள்முதலை வியாபாரிகள் வாங்குவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வேளாண் விற்பனை குழு நேரடியாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும்.
நாகூர், இடையன்குளம்: ஸ்ரீவில்லிபுத்துார் ராஜபாளையம் ரோட்டில் மம்சாபுரத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை வசதி இல்லை. இதனால் விளை பொருள்களை கொண்டு வருவதற்கு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து ஐந்து ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
அப்பாஸ் குலாம் மைதீன், தென்னை விவசாயிகள் சங்க தலைவர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தெய்வேந்திரி, சிவந்திபட்டியில் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளது. காந்திநகர் கோட்டைப்பட்டி, ஒத்தப்பட்டி, நரையங்குளம் மம்சாபுரம் பகுதி விவசாயிகள் சென்று வர முடியாத அளவிற்கு ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைவித்த விளை பொருட்களை கொண்டு வர முடியவில்லை.
கணேசன், சிவகாசி: ஆனைக்குட்டம் ஆயக்கட்டுடன் வாடி பகுதி பாசனப்பகுதிகளை சேர்க்க வேண்டும். இது குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
ஆர்.டி.ஓ., பதில் அளித்து பேசுகையில், கடந்த காலங்களில் விவசாயிகளிடம் பெறப்பட்ட கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தற்போது கொடுக்கப்பட்ட அனைத்து புகார்களும் சரி செய்யப்படும் என்றார்.

