/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முடுக்கன்குளம் வாரச்சந்தையில் வாகனங்களால் இடையூறு
/
முடுக்கன்குளம் வாரச்சந்தையில் வாகனங்களால் இடையூறு
ADDED : நவ 26, 2024 04:43 AM

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளம் வாரச்சந்தையில் வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அப்பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சந்தைக்கு வரும் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரியாபட்டி முடுக்கன்குளத்தில் சனிக்கிழமை தோறும் காய்கறி வாரச்சந்தை நடக்கிறது. சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் காய்கறிகள் வாங்க வருகின்றனர். இச்சந்தை காரியாபட்டி - நரிக்குடி ரோட்டில் அமைந்துள்ளது. சந்தைக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரும் வியாபாரிகள் மினி வேன் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வருகின்றனர். அவற்றை இறக்கி வைத்துவிட்டு வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துகின்றனர். அதேபோல் காய்கறி வாங்க சிலர் டூவீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். அவர்களும் ரோட்டில் நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்குகின்றனர். இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பல்வேறு ஊர்களுக்கு இந்த வழித்தடத்தில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. குறுகிய ரோடாக இருப்பதால் சந்தையை ஒட்டி நிறுத்தப்படும் வாகனங்களால் அப்பகுதியை கடக்க, இரு சக்கர வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை. டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, சந்தைக்கு வரும் வாகனங்களை நிறுத்த சந்தை நிர்வாகம் மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.