/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட அணைகளை பராமரிக்க வேண்டும்
/
மாவட்ட அணைகளை பராமரிக்க வேண்டும்
ADDED : நவ 24, 2024 07:37 AM
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 அணைகளை பராமரித்து பாதுகாக்க அரசு நடவடிக்கை வேண்டும், என காவிரி, குண்டாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர் சந்தை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகளையும், கவுசிகா நதியையும் காவிரி, வைகை, குண்டாறு, கிருதுமால் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் மாரிமுத்து, செயலாளர் முருகன், பொதுச் செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் விவசாய நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுனன்: நாங்கள் கவுசிகா நதி, குல்லூர்சந்தை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி, அணைகளை ஆய்வு செய்தோம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கௌசிகா நதி புராதானமான நதி.
வத்திராயிருப்பு பகுதியில் இருந்து துவங்கி காட்டாற்று வெள்ளம் வடமலைகுறிச்சி வழியாக கவுசிகா நதி வந்தடைந்து, அங்கிருந்து குல்லூர் சந்தை அணைக்கு வருகிறது.
இன்றைக்கு கவுசிகா நதியில் விருதுநகர் நகராட்சியில் உள்ள குப்பை கழிவுகள் அனைத்தும் கலக்கின்றன. தற்போது கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது.
1982ல், அன்றைய முதல்வர் எம்ஜிஆர் முயற்சியால் 7 கிராமங்களுக்கும், 2 ஆயிரத்து 891 ஏக்கர் நிலங்களுக்கு ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த அணை கட்டப்பட்டது.
இதிலிருந்து தண்ணீர் திறக்கப்படாமல் நீர்வளத்துறை மீன் வளர்ப்புக்காக மட்டுமே அணையை பயன்படுத்தி வருகிறது. தற்போது இதுவும் கழிவுநீர் தேக்கமாக மாறி உள்ளது. அணையில் மணல்மேடுகள் ஏற்பட்டு முட்புதர்கள் முளைத்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
கவுசிகா நதி, குல்லூர் சந்தை அணை பாதுகாக்கப்பட வேண்டும். விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். அணைகளை பராமரிக்காவிடில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றனர்.
உடன் விருதுநகர் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.