/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வாறுகால் அமைக்கும் பணிகள்; ரயில்வே பீடர் ரோட்டில் துவக்கம்

ADDED : நவ 06, 2025 07:06 AM

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வாறுகால் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளனர். இதனால் ரோட்டின் அளவு குறைந்து நாளடைவில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் இருந்து காரியாபட்டி, மல்லாங்கிணர், அதனை சுற்றிய பகுதிகளுக்கும், அரசு மருத்துவமனைக்கும் செல்லும் முக்கிய ரோடாக ரயில்வே பீடர் ரோடு உள்ளது. இதனால் கடைகள், உணவகங்கள் அதிக அளவில் ரோட்டின் இருபுறமும் நிறைந்து இருக்கிறது.
ஆனால் ரோடு ஓரத்தில் கடைகள், உணவகங்களை நடத்துபவர்கள் தகர செட் அமைத்து ரோடு வரை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் ரயில்வே பீடர் ரோட்டில் பஸ்கள், வேன்கள் சென்றாலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடைகளின் இருபுறமும் சேதமான வாறுகால் நகராட்சி நிர்வாகத்தினரால் மீண்டும் சீரமைக்க டெண்டர் விடப்பட்டு புதிதாக வாறுகால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக ரோட்டின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வாறுகால் அமைத்தால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக மாறிவிடும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து ரோடு ஓரத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் வாறுகால் அமைக்கும் பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.