/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துார்ந்து போன நீர்வரத்து ஓடைகள்
/
துார்ந்து போன நீர்வரத்து ஓடைகள்
ADDED : ஜன 16, 2025 04:39 AM
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் பல்வேறு கண்மாய்களுக்கு செல்லும் வரத்து ஓடைகள் தூர்ந்து போயின. அவற்றைதூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பகுதியில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான கண்மாய்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக கம்பிக்குடி கண்மாய் நிறைந்து, வெளியாகும் உபரி நீர் பாப்பனம், சத்திர புளியங்குளம், அல்லாளப்பேரி, முடுக்கன்குளம், காரைக்குளம் வரை உள்ள பல்வேறு கண்மாய்களுக்கு வரத்து ஓடைகள் மூலம் நீர் கிடைக்கும்.
நாளடைவில் கம்பிக்குடி கண்மாய்க்கு போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் உபரி நீர் இல்லாமல் போனது. காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே உள்ள ஓடைகள் வழியாக அந்தந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு சென்றது.
தற்போது ஆக்கிரமிப்பு, சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, ஓடைகள்தூர்ந்து போய் காணப்படுகின்றன. கரைகள் சேதப்படுத்தப்பட்டு, கிடைக்கிற தண்ணீரும் வீணாக வெளியேறும் அளவிற்கு படுமோசமாக இருக்கிறது. பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. கண்மாய்களை தூர்வாரினால் மட்டும் போதாது.
நீர் ஆதாரத்துக்கான வரத்து ஓடைகளையும் தூர்வார வேண்டிய அவசியம் உள்ளது. அது போன்று பெரும்பாலான ஓடைகள்காணாமல் போயின. அவற்றை கண்டறிந்து தூர்வாரினால், மழைக்காலங்களில் வெளியாகும் உபரி நீர் வீணாகாமல் மற்ற கண்மாய்களுக்கு சென்று சேரும். இதன் மூலம் குடிநீர், கால்நடைகள் வளர்ப்பு, விவசாயம் என அனைத்து பிரச்னைக்கும் தீர்வாக அமையும்.
இதனை கருத்தில் கொண்டு கம்பிக்குடி கண்மாயிலிருந்து உபரி நீர் செல்லும் வரத்து ஓடைகளை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

