ADDED : செப் 01, 2024 05:05 AM
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் கீழ் தினசரி தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். மேலும் ரோடு, வாறுகால், சுகாதார வளாகம் போன்ற கூடுதல் வசதிகள் செய்து தரும் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் அடிப்படை வசதிகள் பணிகள் நாளுக்கு நாள் தொய்வடைந்து வருகிறது.
அதேநேரம் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகையும், குடியிருப்புகளும் அதிகரித்து வருவதால் பணியாட்கள் பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகள் உடனடியாக செய்ய முடியாத நிலைக்கு உள்ளாட்சி அமைப்புகள் தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் நகராட்சி பகுதிகள் விரிவடைந்து, கிராமங்களுடன் இணையும் வகையில் வீடுகள் அதிகரித்து வருகிறது. ஆனால், விரிவாக்க பகுதிகளில் முறையான ரோடு, வாறுகால், குடிநீர் இணைப்புகள் வழங்க ஊராட்சிகள் திணறி வருகிறது. மேலும் நிதிப்பற்றாக்குறையால் அன்றாட பராமரிப்பு பணிகள் மட்டுமே ஊராட்சிகள் செய்து வருகிறது. இந்நிலை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் காணப்படுகிறது.
இதனை தவிர்க்க உள்ளாட்சி அமைப்புகள் எல்லைகள் விரிவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம். அவ்வாறு செய்தால்தான் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி உள்ளாட்சி அமைப்புகள் பயணிக்க முடியும்.
தற்போது ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறை, தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் கிராமங்களில் சுகாதாரக்கேடு, நோய் பாதிப்பு, பாதுகாப்பற்ற குடிநீர் வழங்க முடியாத நிலை தொடர்கிறது.
இந்நிலையில் தற்போதைய ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய இருப்பதால், அதன்பின் ஊராட்சிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் ராஜபாளையத்தில் 9 ஊராட்சி, ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 ஊராட்சியும் இணைந்து, ராஜபாளையம் மாநகராட்சி உருவாக்க திட்டமிட்ப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிற நகராட்சிகளிலும் எல்லைகள் விரிவாக்கம் செய்து, ஊராட்சிகளை இணைப்பது மிகவும் அவசியமாகும். போதிய நிதி வருவாய் இல்லாத வத்திராயிருப்பு தாலுகாவில் ஒரு ஊராட்சி ஒன்றியம், 4 பேரூராட்சிகள்,29 ஊராட்சிகள் உள்ளன.
இங்கு ஆண்டுதோறும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த 5 உள்ளாட்சி அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, வத்திராயிருப்பை ஒரு மூன்றாம் நிலை நகராட்சியாக்க வேண்டும்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளை பிரித்து, பேரூராட்சிகள் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். இதுபோன்று மாவட்டத்தில் நகராட்சி எல்லைகளை 5 கி.மீ. சுற்றளவிற்கு விரிவாக்கம் செய்தும், அதிக வருமானம் உள்ள ஊராட்சிகளுடன் வருமானம் குறைந்த ஊராட்சிகளை இணைத்து பேரூராட்சியாக மாற்றும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்தி அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.